ரூ. 6 ஆயிரம் உதவித்தொகை: நில உரிமை மேம்பாட்டுத் திட்டத்தை கொண்டுவர விவசாயிகள் வலியுறுத்தல்
By DIN | Published On : 14th June 2019 08:59 AM | Last Updated : 14th June 2019 08:59 AM | அ+அ அ- |

நில உரிமை மேம்பாட்டுத் திட்டத்தை கொண்டு வர காவிரி டெல்டா பாசன விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் மகாதானபுரம் ராஜாராம் கூறியது:
நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயன்பெற வேண்டும் என்ற வகையில்தான் ஆண்டுக்கு ரூ.6,000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். இந்தத் திட்டத்தில் தமிழகத்தில் உள்ள சுமார் 63 லட்சம் விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்றால் கடந்த 1983-இல் முதல்வராக எம்ஜிஆர் இருந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட நிலஉரிமை மேம்பாட்டுத் திட்டத்தை தமிழக அரசு மீண்டும் கொண்டு வரவேண்டும். இத்திட்டத்தில் கணினி பட்டாவுடன் ஆதார் அட்டையில் உள்ள பெயரும் சரியாக இருந்தால் மட்டுமே விவசாயிகளுக்கு, ரூ.6,000 உதவித்தொகை கிடைக்கும். பயனாளி இறந்துவிட்டால், பட்டா மாற்றம் செய்யப்பட்டவரின் பெயரும், ஆதார் பெயரும் சரியாக இருந்தால் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயனடைய முடியும்.
தமிழகத்தில் பட்டா பெயரில் உள்ள சிக்கல் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. 1983-இல் எம்ஜிஆர் நில உரிமை மேம்பாட்டுத் திட்டம் கொண்டு வந்தார். அதற்கு பிறகு நில பத்திரம் பதிவு செய்யப்பட்டு, பட்டா மாறுதல் செய்யப்படவில்லை. பல இடங்களில் விற்றவர்கள் பெயரில் நிலமும் இல்லை. கணினி பட்டா வந்த பிறகு குழப்பம் மேலும் அதிகரித்துவிட்டது. நன்கு பயிற்சி பெறாத கணினி பதிவு அலுவலர்கள் செய்த பிழைகள் ஏராளம். அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக உள்ள தவறுகளை சீரமைக்க அரசு ஒரு நிபுணர் குழுவை அமைத்து நில உரிமை யாருக்கு என்பதை சரி செய்யக்கூடிய இனங்களில் சரிசெய்தால் மட்டுமே பிரதமரின் விவசாய ஆதரவு திட்டத்தில் ரூ.6,000 கிடைக்கும். எனவே 1983-இல் கொண்டுவரப்பட்டு பின்னர் கிடப்பில் போடப்பட்ட நில உரிமை மேம்பாட்டுத் திட்டத்தை அரசு மீண்டும் கொண்டு வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.