குளித்தலை அருகே ரூ.3.28 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 22nd March 2019 09:02 AM | Last Updated : 22nd March 2019 09:02 AM | அ+அ அ- |

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தேர்தல் பறக்கும்படையினர் பால்வண்டி ஓட்டுநர்களிடம் உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.3.28 லட்சத்தை வியாழக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.
மக்களவை பொதுத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் கரூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம், பொருள் பட்டுவாடா செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் ஆங்காங்கே வாகனச் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கரூர் மாவட்டம், குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மருதூர் சோதனைச்சாவடியில் கூட்டுறவு துறை சார் பதிவாளர் குமார், காவல் சிறப்பு சார்ஆய்வாளர் கருப்பண்ணன் ஆகியோர் அடங்கிய நிலைக் குழுவினர் வியாழக்கிழமை இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கரூர் காந்தி கிராமத்தைச் சேர்ந்த கிஷோர் குமார்(28) ஓட்டிவந்த பால் லாரியில் ரூ.1,86,986 ரொக்கமும், கரூர் வீரராக்கியத்தைச் சேர்ந்த குப்புசாமி(48) ஓட்டிவந்த பால் லாரியில் ரூ.1,41,580 ரொக்கமும் உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்றது தெரியவந்தது. இதையடுத்து இருவரிடமும் இருந்து ரொக்கத்தைப் பறிமுதல் செய்து குளித்தலை வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் முருகனிடம் அலுவலர்கள் ஒப்படைத்தனர். குளித்தலை வட்டாட்சியர் சுரேஷ்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...