பெண்களை சுயமாக சிந்திப்பதற்கு அனுமதிப்பதில்லை: பேராசிரியர் பா. ராஜ்குமார்
By DIN | Published On : 22nd March 2019 09:03 AM | Last Updated : 22nd March 2019 09:03 AM | அ+அ அ- |

பெண்களை சிந்திப்பதற்கும், சுயமாக முடிவெடுப்பதற்கும் ஆணாதிக்கம் அனுமதிப்பதில்லை என்றார் திருச்சி பிஷப் ஹூபர் கல்லூரியின் தமிழ் துறை இணை பேராசிரியர் முனைவர் பா. ராஜ்குமார்.
கரூர் அரசு கலைக் கல்லூரியில் தமிழ் துறை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற முத்தமிழ் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உள்ளத்தனையது உயர்வு என்ற தலைப்பில் மேலும் அவர் பேசியது:
தமிழர்கள் நமது மரபுகள், பண்புகள், அடையாளத்தை இழந்து வருகிறோம். குறிப்பாக மருத்துவம், உணவு முறைகள், கலைகள், பண்பாடு ஆகியவற்றை இழந்ததோடு மானத்தையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்த நிலை மாற வேண்டும். தமிழ் சமுதாயத்தில் பெண்களை சிந்திப்பதற்கும், சுயமாக முடிவெடுப்பதற்கும் ஆணாதிக்கம் அனுமதிப்பதில்லை. "பெண்களுக்கு தேவையில்லை இரவல் புத்தி' என்பதை மகளிரும் உணர வேண்டும். ஆண்களுக்கு நிகராக பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என்றார். கல்லூரி முதல்வர் (பொ) அர.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.
பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி ஒருங்கிணைப்பாளர் கி.மாரியம்மாள் வரவேற்றார். விழாவில் நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிபி.ராஜன் உள்ளிட்ட பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகப் பங்கேற்றனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...