போக்ஸோ புகார் பெற மாவட்ட அளவிலான காவல் துறை அலுவலர்கள் நியமனம்
By DIN | Published On : 28th March 2019 07:37 AM | Last Updated : 28th March 2019 07:37 AM | அ+அ அ- |

போக்ஸோ கமிட்டி சார்பில் மாவட்ட அளவில் புகார் பெற காவல்துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை, உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய போக்ஸோ கமிட்டி தெரிவித்திருப்பது:
பாலின வித்தியாசமின்றி, 18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளையும் பாதுகாக்க உருவாக்கப்பட்டது போக்ஸோ சட்டம். ஆண் குழந்தைகள், சிறுவர்கள் பாதிக்கப்பட்டாலும், இச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யலாம். இச்சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளில், 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும்.
ஒரு வருடத்திற்குள் வழக்கு முடிய வேண்டும். தண்டனை நிரூபணம் ஆகும்பட்சத்தில் சாதாரண சிறை தண்டனையிலிருந்து, கடுங் காவல் ஆயுள் தண்டனை வரை கிடைக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது. சில வகை பாலியல் வன்முறைக்குக் கூடுதல் தண்டனை உண்டு. உதாரணமாக, காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர், ராணுவம், அரசு அதிகாரிகள் போன்றவர்கள் பாதுகாவலர்கள் அல்லது நம்பிக்கைக்குரியவர்களே குற்றம் இழைக்கும்போது, அதிக தண்டனை உண்டு என இச்சட்டம் தெளிவுபடுத்துகிறது.
இச்சட்டத்தின் கீழ் குழந்தைகளை பாதுகாக்க, சென்னை, உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய போக்ஸோ கமிட்டி மூலம் மாவட்ட அளவில் புகார் பெற காவல்துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 சட்டத்தின் கீழ் மாவட்ட துணை கண்காணிப்பாளர் காமராஜ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அவரை 94981 59956 என்ற எண்ணிலும், காவல் ஆய்வாளர் செல்வ மலரை 94981 07764 என்ற எண்ணிலும், சார்பு காவல் ஆய்வாளர் சத்தியசுதாவை 94981 83111 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...