கரூர் தொகுதிக்கு எந்த திட்டங்களையும் கொண்டுவரவில்லை
By DIN | Published On : 30th March 2019 08:50 AM | Last Updated : 30th March 2019 08:50 AM | அ+அ அ- |

தொடர்ந்து இருமுறை மக்களவை உறுப்பினராக இருந்தும், அதிமுக வேட்பாளர் தம்பிதுரை கரூர் தொகுதி வளர்ச்சிக்கு எந்தவொரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை என்றார் காங்கிரஸ் வேட்பாளர் செ. ஜோதிமணி.
அரவக்குறிச்சி தொகுதிக்குள்பட்ட கொடையூர், நாகம்பள்ளி, புங்கம்பாடி மேல்பாகம், புங்கம்பாடி கீழ்பாகம், வெஞ்சமாங்கூடலூர் கீழ்பாகம், ஈசநத்தம், அம்மாப்பட்டி, எருமார்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் ஒவ்வொரு கிராமமாக சென்று வெள்ளிக்கிழமை வாக்குச் சேகரித்த அவர் பொதுமக்கள் மத்தியில் பேசியது:
கரூர் அதிமுக வேட்பாளர் மு.தம்பிதுரை இந்த தொகுதியில் 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். தொகுதியின் வளர்ச்சிக்கு எந்த ஒரு திட்டங்களையும் கொண்டுவரவில்லை. மக்களவைத் துணைத்தலைவராக இருந்த அவர் நினைத்திருந்தால், கரூரின் வளர்ச்சிக்கு ஒருங்கிணைந்த சாயப்பட்டறை பூங்கா, விவசாயிகளின் முக்கிய பிரச்சனையாக இருக்கும் அமராவதி ஆற்றில் இருந்து தாதம்பாளையம் ஏரிக்கு நீர் கொண்டு வருதல் போன்ற எண்ணற்ற திட்டங்களையெல்லாம் செய்திருக்கலாம்.
மேலும் மத்திய அரசு ஜவுளி ஏற்றுமதிக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கும் போது அதை எதிர்த்து குரல் கொடுத்திருந்தால், ஜவுளி ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருக்காது. பெரும்பாலான ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு இன்னும் ஜிஎஸ்டியால் பிடித்தம் செய்யப்பட்ட தொகைக்கூட வழங்கப்படவில்லை.
என்னை இந்த தொகுதியில் தேர்ந்தெடுக்கும்போது அனைத்து பிரச்னைகளையும், பிரதமராக வரக்கூடிய ராகுல்காந்தியைச் சந்தித்து தீர்த்து வைப்பேன் என்றார்.
பிரசாரத்தின்போது திமுக மாவட்ட பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி, முன்னாள் அமைச்சர் ம.சின்னசாமி, விசிக மாவட்டச் செயலர் பெ.ஜெயராமன், காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் ஆர்.ஸ்டீபன்பாபு, மாவட்டத்தலைவர் சின்னசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...