ஒன்றியப் பகுதிகளில் செந்தில்பாலாஜி பிரசாரம்
By DIN | Published On : 05th May 2019 03:33 AM | Last Updated : 05th May 2019 03:33 AM | அ+அ அ- |

அரவக்குறிச்சி ஒன்றியப் பகுதிகளில் அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் வி. செந்தில்பாலாஜி சனிக்கிழமை தீவிர பிரசாரம் செய்தார்.
க. பரமத்தி ஒன்றியத்துக்குட்பட்ட குப்பம் ஊராட்சியில் உப்புபாளையம் காலனி, கோங்கரை, அரசம்பாளையம், புதூர்பட்டி, தலையூத்துப்பட்டி, காளிபாளையம், சாலிபாளையம், வேலாயுதம்பாளையம், வேலாயுதம்பாளையம் காலனி, காங்கையம்பாளையம், குப்பம், முன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை தீவிரமாக வாக்கு சேகரித்த அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் வேட்பாளர் செந்தில்பாலாஜி பேசியது:தற்போதைய விலைவாசி உயர்வுக்குக் காரணம் மத்தியில் ஆளும் மோடியும், தமிழகத்தை ஆளும் எடப்பாடி பழனிசாமியும்தான். விலைவாசி குறைய திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக வேண்டும். தேர்தல் அறிக்கையில் கூறியவாறு வீட்டுமனை இலவசமாக 3 சென்ட் வழங்க உள்ளோம் என்றார்.தொடர்ந்து சாலிபாளையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,
தோல்வியின் உச்சத்தில் இருக்கும் ஆளுங்கட்சியினரும், தினகரனும் என்மீது தனிப்பட்ட தாக்குதலைத் தொடுத்து வருகிறார்கள். நொய்யல் ஆற்றில் வரும் சாயக்கழிவால் க.பரமத்தி ஒன்றியத்திற்குட்பட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 50,000 ஏக்கர் நிலங்களுக்கு மேல் பாதிக்கப்பட்டு தற்போது தரிசு நிலமாக உள்ளது. இப்பகுதி மீண்டும் வளம் கொழிக்கும் பகுதியாக மாறும். இதற்கான திட்டத்தை திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அமையும் தமிழக அரசு நிச்சயம் நிறைவேற்றித் தரும் என்றார்.
பிரசாரத்தில் கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செ. ஜோதிமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.