தேர்தலுக்கு பிறகும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்: ஜி.கே. மணி பேட்டி
By DIN | Published On : 05th May 2019 03:32 AM | Last Updated : 05th May 2019 03:32 AM | அ+அ அ- |

தேர்தலுக்கு பிறகும் அதிமுகவுடன், பாமகவின் கூட்டணி தொடரும் என்றார் பாமக மாநிலத் தலைவர் ஜி.கே. மணி.
நடைபெற உள்ள அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர் செந்தில்நாதனை வெற்றிபெறச் செய்வது குறித்து பாமக சார்பில் சனிக்கிழமை கரூரில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் மேலும் கூறியது:
இடைத்தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி. இந்த வெற்றி மூலம் அதிமுக ஆட்சி நீடிக்கும்.
பொதுத்தேர்தலைச் சந்திக்காமல் இடைத்தேர்தல் மூலம் ஆட்சியைப் பிடிப்போம் திமுக தலைவர் ஸ்டாலின் கூறுவது பகல் கனவு. ஒரு தொகுதியிலும் கூட அவர்கள் வெற்றி பெறப் போவதில்லை. 22 தொகுதியிலும் அதிமுக வெற்றிபெறுவது உறுதி. இந்த ஆட்சி நீடிப்பதன்மூலம் தமிழகம் வளர்ச்சி பெறும். இதில் மாற்றுக் கருத்தே இல்லை.
பாமகவின் நீர் மேலாண்மை திட்டத்தின் அடிப்படையில் கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவோம் என முதல்வர் எடப்பாடி கூறி வருவதை பாமக வரவேற்கிறது.
இப்படி நல்ல திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளதை மனதில் கொண்டு அரவக்குறிச்சி தொகுதி உள்ளிட்ட 4 தொகுதி மக்களும் அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்றார் அவர்.
பேட்டியின்போது அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், அன்வர்ராஜா எம்பி, வேட்பாளர் செந்தில்நாதன், பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் பிஎம்கே. பாஸ்கரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.