கரூர்: சாலையோரங்களில் அபாயகரமான குழிகள்
By DIN | Published On : 19th May 2019 08:57 AM | Last Updated : 19th May 2019 08:57 AM | அ+அ அ- |

கரூர் மாவட்டத்தில் சாலையோரங்களில், தடுப்பு வசதியின்றி ஏராளமான பாறைக்குழிகள் காணப்படுகின்றன. இதனால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க தடுப்புச்சுவர்கள் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் காவிரி மற்றும் அமாரவதி ஆறுகளில் மணல் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மணலுக்கு மாற்றாக கல்குவாரிகளில் இருந்து எம்-சேன்ட் அதிகளவில் பெறப்படுகிறது.
மாவட்டத்தில் கட்டுமானத்தொழில் நலிவடையாமல் ஓரளவுக்கு கை கொடுப்பது இந்த எம்-சேன்ட் தான். கரூர் மாவட்டத்தில் தரகம்பட்டி, தோகைமலை, கடவூர் உள்ளிட்ட பகுதிகளில் கல்குவாரிகள் இருந்தாலும், மாவட்டத்தில் 90 சதவீத குவாரிகள் க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள குப்பம், தென்னிலை, க.பரமத்தி, முன்னூர், பவித்திரம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படுகின்றன. இங்கிருந்து வெட்டி எடுக்கப்படும் கற்கள் அளவுக்கு தகுந்தாற்போல மாற்றப்பட்டு தமிழகம் மட்டும் இன்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
ஆறுகளில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கல்குவாரிகளில் இருந்து எம்-சேன்ட் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் சாலையோரம் குவாரிகளை நடத்துவோர், கற்களை வெட்டி எடுக்கும் அனுமதி முடிந்தவுடன் அதை அப்படியே போட்டுவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். பெரும்பாலும் சாலையோரம் உள்ள குவாரிகளில் பாறைகள் உடைக்கப்பட்டு தோண்டி எடுக்கப்பட்ட பின் அதன் ஆழம் சுமார் 60 அடி வரை உள்ளது.
இந்த அபாயகரமான குழிகளால் இரவு நேரங்களில் வாகனங்களில் வருவோர் விபத்துகளில் சிக்கும் நிலை உள்ளது. இதனால டெண்டர் முடிந்தவுடன் குவாரிகளை விட்டுச் செல்லும்போது, சாலையில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.