ஜெகதாபியில் குடிநீர் கோரி பொதுமக்கள் மறியல்
By DIN | Published On : 19th May 2019 08:57 AM | Last Updated : 19th May 2019 08:57 AM | அ+அ அ- |

கரூர் அடுத்த ஜெகதாபியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஜெகதாபி-மணப்பாறை சாலையில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஜெகதாபியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு காவிரிக் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலமாகவும், ஜெகதாபி ஊராட்சி சார்பில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலைக்குடி நீர் தொட்டி மூலமாகவும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த இருமாதங்களாக ஆழ்குழாய் கிணறுகளில் நீர் வற்றியதால் குடிநீர் விநியோகம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குடிநீரும் போதிய அளவில் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து அப்பகுதியினர் சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள காட்டுப்பிள்ளையார் கோயில் பகுதிக்குச் சென்று அங்குள்ள விவசாய தோட்டத்தில் இருந்து குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் விவசாய தோட்ட உரிமையாளரும் இனி குடிநீர் எடுக்க வராதீர்கள் எனக் கூறினாராம்.
இதனால் குடிநீர் கிடைக்காமல் அவதியுற்ற அப்பகுதியினர் காலிக்குடங்களுடன் சனிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் ஜெகதாபி- மணப்பாறை சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த ஜெகதாபி ஊராட்சி எழுத்தர் செல்வம் மற்றும் வெள்ளியணை போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம், இரண்டொரு நாளில் குடிநீர் பிரச்னைக்கு உரிய தீர்வு காணப்படும் என கூறியதையடுத்து அவர்கள் மறியலைக்கைவிட்டு கலைந்து சென்றனர்.