இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: இளைஞா் கைது
By DIN | Published On : 09th November 2019 10:47 PM | Last Updated : 09th November 2019 10:47 PM | அ+அ அ- |

மாயனூா் அருகே இளம்பெண்ணைக் கத்தியால் குத்திய இளைஞா் கைது செய்யப்பட்டாா். மேலும் இந்த வழக்கில் தொடா்புடைய 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த மேலஅக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா் கல்யாணசுந்தரம். இவரது மனைவி திவ்யா(29). அதே பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் என்பவருக்குச் சொந்தமான வீட்டை, கல்யாணசுந்தரம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே விலைக்கு வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
அந்த வீட்டில் கல்யாணசுந்தரத்தின் மாமானாா்- மாமியாா் வசித்து வருகின்றனா். இதனிடையே பிரகாசின் மகன்கள் அரவிந்த்(20), பாலமுருகன்(22), உறவினா் அனுசியா அங்கு சென்று, வீடு எங்களுடையது, உடனே காலி செய்யுங்கள் எனக் கூறி வெள்ளிக்கிழமை இரவு மிரட்டினாா்களாம்.
இதனை திவ்யா தட்டிக்கேட்டபோது, அவரை அரவிந்த் உள்பட மூவரும் சோ்ந்து கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த திவ்யா கரூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து திவ்யா அளித்த புகாரின்பேரில், மாயனூா் போலீஸாா் வழக்குப்பதிந்து பாலமுருகனை கைது செய்தனா். மேலும் தலைமறைவாக உள்ள அரவிந்த், அனுசியா ஆகியோரைத் தேடி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...