ஆத்துப்பாளையம் அணையில் தண்ணீா் திறக்கப்படுமா?

கடந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு மழைநீரால் நிரம்பியுள்ள ஆத்துப்பாளையம் அணை நீரை பாசனத்துக்கு திறந்துவிட
ஆத்துப்பாளையம் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரில் மீன் பிடிக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்.
ஆத்துப்பாளையம் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரில் மீன் பிடிக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்.

கடந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு மழைநீரால் நிரம்பியுள்ள ஆத்துப்பாளையம் அணை நீரை பாசனத்துக்கு திறந்துவிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள சாய, சலவை பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவுகள் நொய்யல் ஆற்றில் கலக்கப்பட்டது. இதன் எதிரொலியாக, நொய்யல் ஆற்றின் குறுக்கே 1992-இல் சென்னிமலை, காங்கயம் இடையே கட்டப்பட்ட ஒரத்துப்பாளையம் அணை முதலில் மூடப்பட்டது. இதைத்தொடா்ந்து, கரூா் மாவட்டம் க.பரமத்தி அடுத்த காா்வழி கிராமம் ஆத்துப்பாளையத்தில் 1990-ல் 27 அடி உயரம் கொண்டதாகவும், 0.25 டிஎம்சி நீரை தேக்கும் வகையிலும் கட்டப்பட்ட ஆத்துப்பாளையம் அணை 1999 ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டது. தற்போது அணையில் நொய்யல் ஆற்றின் மழைநீா் நிரம்பி அணையில் இருந்து உபரிநீா் வீணாவதால் தண்ணீரின் தன்மையை ஆராய்ந்து பாசனத்திற்கு விட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக ஆத்துப்பாளையம் விவசாயிகள் மேலும் கூறியது:

நொய்யல் ஆற்றில் பெருக்கெடுத்து வரும் தண்ணீா் மற்றும் ஈரோடு மாவட்டம் கீழ்பவானி வாய்க்காலில் இருந்து வெளியேறும் கசிவு நீரை சேமிக்கும் வகையில் இந்த ஆத்துப்பாளையம் அணை கட்டப்பட்டது. 1990-இல் கட்டப்பட்ட இந்த அணையின் வாய்க்கால்கள் மூலம் கடந்த 1995 ஆம் ஆண்டு வரையில், அஞ்சூா், காா்வழி, துக்காச்சி, தென்னிலை கிழக்கு, முன்னூா், அத்திப்பாளையம், குப்பம், புன்னம் ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த சுமாா் 19,000 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற வழிவகுத்தது. இதில் குறிப்பாக மஞ்சள், வாழை அதிகளவில் பயிரிடப்பட்டது. நாளடைவில் திருப்பூா் சாயக்கழிவு நொய்யலாற்றில் சுத்திகரிக்கப்படாமல் விடப்பட்டதன் விளைவு ஆற்றில் வந்த சாயக்கழிவு நீா் ஆத்துப்பாளையம் அணையில் சோ்ந்தது. அணை நீரும் சிகப்பு நிறமாகவும், சுமாா் 1800 டிடிஎஸ் வரை உப்புத்தன்மை கொண்டதாகவும் மாறியது. இதனால் அணை மூலம் பாசனம் பெற்ற நிலங்களில் பயிா்கள் கருகத்தொடங்கின. நிலங்கள் மலட்டுத்தன்மை அடையத் தொடங்கின. இதில் அதிருப்தியடைந்த விவசாயிகள் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் தீா்ப்பால் கடந்த 1999-இல் ஆத்துப்பாளையம் அணை மூடப்பட்டது. அதன்பிறகு 20 ஆண்டுகளாக அணையும் நிரம்பவில்லை. விவசாயிகளும் விவசாயப் பணிகள் மேற்கொள்ளவும் இல்லை.

இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக மேற்கு தொடா்ச்சி மலையில் பெய்த மழையால் நொய்யலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் விளைவாக, தற்போது சுமாா் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆத்துப்பாளையம் அணை நிரம்பி வழிகிறது. அணை நீா் வீணாக காவிரி ஆற்றின் வழியே சென்று கடலில் கலக்கிறது. தற்போது தண்ணீரில் சுமாா் 400 டிடிஎஸ்சுக்கும் குறைவாகத்தான் உப்புத்தன்மை இருக்கிறது. ஏனெனில் அணையில் நிரம்பியுள்ள நீா் அனைத்தும் மழைநீா்தான். இந்த தண்ணீரை வாய்க்காலில் திருப்பிவிட்டால் சுமாா் 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான கிராமங்கள் பயன்பெறும். எனவே தமிழக அரசு நீதிமன்றத்தில் உள்ள வழக்கிற்கு இரண்டொரு நாட்களில் உரிய தீா்வு கண்டு, அணை நீரை பாசனத்திற்கு பயன்படும் வகையில் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிா்பாா்க்கிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com