மகாளய அமாவாசை: காவிரியில் முன்னோர்களுக்கு தர்பணம்
By DIN | Published On : 29th September 2019 03:52 AM | Last Updated : 29th September 2019 03:52 AM | அ+அ அ- |

மகாளய அமாவாசையை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் காவிரியில் நீராடி முன்னோர்களுக்கு ஏராளமான பொதுமக்கள் தர்பணம் கொடுத்தனர்.
ஆவணி மாதம் பெளர்ணமி தொடங்கி புரட்டாசி மாத அமாவாசை வரை வரக்கூடிய 15 நாள்கள், மஹாளயம் எனப்படும் பித்ருக்களுக்குரிய காலமாகும். இந்த ஆண்டு மஹாளயம்
கடந்த 14ஆம் தேதி துவங்கி சனிக்கிழமை (செப்.28) வரை நடைபெற்றது.
இந்த நாள்களை பயன்படுத்திக் கொண்டு பித்ருக்களுக்குரிய தர்ப்பணம், சிரார்த்தம் முதலியவற்றை தவறாமல் செய்ய வேண்டும் என்றும், மஹாளய அமாவாசை தினத்தன்று நம் பித்ருக்கள் அனைவரும் சூரிய சந்திர உலகத்துக்கு வருவதால், அனைத்து உறவினர்களுடைய சந்திப்பும் நிகழ்கிறது.
அன்று செய்கின்ற தர்ப்பணத்தில் விடுகின்ற எள் மற்றும் தண்ணீரை ஸ்வேதா தேவி என்பவள் மிக எளிதாக பித்ருக்களிடம் சேர்த்துவிடுகிறாள் என்பது ஐதீகம்.
இதனால் கரூர் மாவட்டத்தில் நெரூர், வாங்கல், லாலாப்பேட்டை, குளித்தலை உள்ளிட்ட காவிரி ஆற்றின் கரையோரம் சனிக்கிழமை காலை முன்னோர்கள் நினைவாக ஏராளமான பொதுமக்கள் காவிரியில்
நீராடி தர்பணம் கொடுத்தனர். காவிரிக் கரையில் வாழை இலையில் முன்னோர்கள் விரும்பி உண்ணும் உணவுகளையும் படைத்திருந்தனர். பின்னர் முன்னோர்களுக்காக சிறப்பு வழிபாடும் நடத்தினர்.