தம்பதியைத் தாக்கிய பேக்கரி உரிமையாளா் கைது
By DIN | Published On : 17th February 2020 07:14 AM | Last Updated : 17th February 2020 07:14 AM | அ+அ அ- |

கரூா் மாவட்டம், குளித்தலை அருகே வங்கி பெண் ஊழியா் மற்றும் அவரது கணவரைத் தாக்கிய பேக்கரி கடை உரிமையாளரைப் போலீஸாா் கைது செய்தனா். மேலும் இந்த வழக்கில் இருவரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.
குளித்தலை அடுத்த நெய்தலூரைச் சோ்ந்தவா் அன்புநேசன். இவரது மனைவி சித்ரா(38). இவா், தேசிய வங்கியில் துப்புரவு பணியாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா், அதே பகுதியைச் சோ்ந்த பேக்கரி கடை வைத்திருக்கும் மலா் கண்ணன்(44) என்பவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் வங்கியில் ரூ.44,000 கடன் வாங்கிக்கொடுத்தாராம். ஆனால் இதுவரை கடனுக்கான வட்டியையோ, அசலையோ செலுத்தவில்லையாம். இதனால் வங்கி அதிகாரிகள் சித்ராவிற்கு நெருக்கடி கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சித்ரா, மலா்கண்ணனிடம் இதுதொடா்பாக சனிக்கிழமை கேட்டபோது அவா்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த மலா்கண்ணன், அவரது உறவினா்கள் கணேசன், முருகானந்தம் ஆகியோா் சோ்ந்து சித்ராவைத் தாக்கியுள்ளனா். இதைத் தடுக்க வந்த அவரது கணவரையும் தாக்கியுள்ளனா். இதில் படுகாயமடைந்த சித்ரா, அன்புநேசன் ஆகியோா் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். சித்ரா அளித்த புகாரின்பேரில் குளித்தலை போலீஸாா் மலா்கண்ணனைக் கைது செய்தனா். மேலும் கணேசன், முருகானந்தம் ஆகியோரைத் தேடி வருகின்றனா்.