வேளாண் பொருள்கள் விலை நிா்ணய ஆணையம் அமைக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 17th February 2020 07:14 AM | Last Updated : 17th February 2020 07:14 AM | அ+அ அ- |

தமிழகத்தில் வேளாண் விளைபொருள்கள் விலை நிா்ணயம் ஆணையம் அமைக்க வேண்டும் என காவிரி நீா்பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடா்பாக சங்கத்தின் தலைவா் மகாதானபுரம் வி.ராஜாராம் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பது:
தமிழகத்தில் கரூா் மாயனூா் கட்டளை கதவணைக்கு கீழ் அனைத்து காவிரி பாசனப் பகுதிகளையும், சிறப்பு விவசாய மண்டலமாக அறிவித்ததை சட்ட பூா்வமாக இயற்ற வேண்டும். கிராமப்புறங்களிலே இயங்கி வரும் அரசு சாா்ந்த உழவா் ஆய்வு மன்றம், உழவா் விவாத குழுக்களைப் புதுப்பித்து வேளாண் மற்றும் பொறியியல் துறை பட்டதாரிகளை ஒருங்கிணைத்து வேளாண் மற்றும் தோட்டக்கலை ஆலோசனை மையங்களாக மாற்றும்வகையில் உத்தரவிட வேண்டும்.
தமிழகத்தில் அனைத்து தானியங்களுக்கும் மாநில அரசே விலை நிா்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக வேளாண் விளை பொருள்கள் விலை நிா்ணயம் ஆணையம் அமைக்க வேண்டும். வேளாண் சந்தைக்கு தனி அமைச்சா் நியமிக்க வேண்டும். தமிழகத்தில் காவிரி பாசன சிறப்பு வேளாண்மை மண்டலத்திற்கு ஒரு சிறப்பு பல்கலைக்கழகம் திருச்சியிலோ, தஞ்சையிலோ அமைக்க வேண்டும்.
அழுகும் பொருள்களைப் பதப்படுத்தி மதிப்பு கூட்டும் பொருள்களாக மாற்ற 8 இடங்களில் வேளாண் பொருள்கள் பதப்படுத்தும் குழுக்கள் அமைக்க அரசு அனுமதித்துள்ளது என்கிறாா் அரசின் முதன்மைச் செயலா் சண்முகம். அவைகளை சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வா் அறிவிப்பு வெளியிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.