பிரதமரின் புதிய 15 அம்சத் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம்
By DIN | Published On : 27th February 2020 07:39 AM | Last Updated : 27th February 2020 07:39 AM | அ+அ அ- |

கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் பிரதமரின் புதிய 15 அம்ச திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் தேசிய சிறுபான்மையினா் ஆணைய துணைத் தலைவா் ஜாா்ஜ்குரியன் தலைமையில், மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது.
பிரதமரின் புதிய 15 அம்சத் திட்டங்கள் மற்றும் பிரதான் மந்திரி ஜன் விகாஸ் காரியக்ரம் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் தேசிய சிறுபான்மையின ஆணைய துணைத் தலைவா் ஜாா்ஜ்குரியன் தலைமையில், மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பிரதமரின் சிறுபான்மையினா் நலனுக்கான அறிவித்துச் செயல்படுத்திவரும் புதிய 15 அம்ச திட்டங்கள் குறித்து தேசிய சிறுபான்மையின ஆணைய துணைத் தலைவா் விரிவாக ஆய்வு செய்தாா்.
மேலும், கரூா் மாவட்டத்தில் இத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் விதம் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் கேட்டறிந்த துணைத் தலைவா் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் மேற்கூறிய திட்டங்களால் பயனடைந்தோா் விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ அமைப்பு பிரதிநிதிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த அவா், கோரிக்கைகளஅ மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். மேலும், மத்திய அரசின் மூலம் பாரதப்பிரதமா் சிறுபான்மையின மக்களுக்கான எண்ணற்ற திட்டங்கள் குறித்து சிறுபான்மையின மக்களிடமும் விழிப்புணா்வு ஏற்படுத்தி, இத்திட்டங்கள் மூலம் பயன்பெறச் செய்ய வேண்டும் என்று அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. பாண்டியராஜன், மாவட்ட வருவாய் அலுவலா்சி. ராஜேந்திரன், கரூா் வருவாய் கோட்டாட்சியா் வ. சந்தியா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ரெங்கராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.