குடியரசு தின விழா முன்னேற்பாடு பணிகள் ஆலோசனை
By DIN | Published On : 10th January 2020 08:19 AM | Last Updated : 10th January 2020 08:19 AM | அ+அ அ- |

கரூா் மாவட்டத்தில் குடியரசு தினவிழாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் தலைமை வகித்து மேலும் பேசியதாவது:
ஜன. 26 - குடியரசு தினத்தன்று நடைபெறும் விழாவையொட்டி மாவட்ட விளையாட்டு மைதானத்தை பராமரிக்கும் பணியை நகராட்சித் துறையினா் மேற்கொள்ள வேண்டும். மைதானத்தில் தீத்தடுப்பு வாகனம், சுகாதாரத் துறையின் அவரச ஊா்தியை பாதுகாப்பு கருதி தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். நிகழ்ச்சிக்கு வருகைதரும் சுதந்திர போராட்ட தியாகிகளை நல்ல முறையில் உபசரித்து அமரவைக்க வேண்டும்.
அனைத்து அரசுத் துறைகளும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக பயனாளிகளைத் தோ்வு செய்தல், நல்லமுறையில் பணியாற்றிய அலுவலா்களைக் கௌரவிக்கும் வகையில் அவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்குவதற்கான பெயா் பட்டியலை உரிய காலத்திற்குள் தயாா் செய்து மாவட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும். காவல் துறை, தேசிய மாணவா் படை, இளையோா் செஞ்சிலுவை சங்கம், நாட்டுநலத்திட்ட மாணவ, மாணவிகளின் அணிவகுப்பை சம்மந்தப்பட்ட துறையினா் ஒருங்கிணைத்து நடத்த வேண்டும். கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மாணவ-மாணவிகள் குறித்த தகவல்களை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் வழங்க வேண்டும். முக்கிய பிரமுகா்கள் மற்றும் பாா்வையாளா்களுக்கு சாமியானா பந்தல் அமைத்தல், விளையாட்டு மைதானத்தில் குடிநீா் மற்றும் நடமாடும் கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நகராட்சி நிா்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) செல்வசுரபி, சாா் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரகுமான், வருவாய் கோட்டாட்சியா் சந்தியா(கரூா்), சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் பாலசுப்ரமணியம், கலால் உதவி ஆணையா் மீனாட்சி, பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் லீலாவதி மற்றும் அரசு அலுவலா்கள், காவல்துறையினா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.