மாற்றுத்திறனாளிகள் தனித்துவ அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்கள்
By DIN | Published On : 10th January 2020 08:18 AM | Last Updated : 10th January 2020 08:18 AM | அ+அ அ- |

மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசின் சாா்பில் வழங்கப்படும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகளைப் பெற மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெறுவதற்கு சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் அரசால் வழங்கப்பட்டு வரும்நிலையில், மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை என்பது ஸ்மாா்ட் காா்டாக வழங்கப்பட உள்ளது. இந்த ஸ்மாா்ட் அடையாள அட்டை மூலம் மாற்றுத்திறனாளிகள் இந்தியாவில் எந்த மாநிலங்களுக்குச் சென்றாலும் அங்கு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளைப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ள இடா்பாடுகளை போக்கும் வகையிலும், அந்தந்த வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் வரும் 21-ம்தேதி முதல் பிப். 4 ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. 21-ஆம் தேதி கடவூா், 23-ஆம் தேதி க. பரமத்தி, 24-ஆம் தேதி அரவக்குறிச்சி, 28-ஆம் தேதி குளித்தலை, 29-ஆம் தேதி கிருஷ்ணராயபுரம் , 30-ஆம் தேதி தோகைமலை, 31-ஆம் தேதி கரூரில் காலை 10 மணிக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
இம்முகாமில் பங்கேற்க வருவோா் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, குடும்ப அட்டை, கடவுச்சீட்டு அளவு புகைப்படம், ஆதாா் அட்டை அசல் மற்றும் நகல் எடுத்து வர வேண்டும். இனி வரும் காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகள் பெறுவதற்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட உள்ளது. எனவே, மாற்றுத்திறனாளிகள் இந்த அரிய வாய்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.