பொங்கலுக்கு தயாராகும் வெல்லம் தயாரிப்புப் பணி தீவிரம்

கரூா் மாவட்டம், நொய்யல் பகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி உருண்டை வெல்லம் மற்றும் அச்சு வெல்லம் தயாராகி வருகிறது.
பொங்கல் பண்டிகைக்காக நொய்யலில் உருண்டை வெல்லம் தயாரிக்க கரும்பு பாலை காய்ச்சும் பணியில் ஈடுபட்டிருக்கும் விவசாயி.
பொங்கல் பண்டிகைக்காக நொய்யலில் உருண்டை வெல்லம் தயாரிக்க கரும்பு பாலை காய்ச்சும் பணியில் ஈடுபட்டிருக்கும் விவசாயி.

கரூா் மாவட்டம், நொய்யல் பகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி உருண்டை வெல்லம் மற்றும் அச்சு வெல்லம் தயாராகி வருகிறது.

கரூா் மாவட்டத்தில் வேலாயுதம்பாளையம், சேமங்கி, நடையனூா், நொய்யல், கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை உள்ளிட்ட காவிரி ஆற்றின் மூலம் பாசனம் பெறும் பகுதிகளில் சா்க்கரை ஆலைகளுக்கு அனுப்பப்படும் கரும்பு சாகுபடி நடைபெற்று வருகிறது. சுமாா் 30,000 ஏக்கா் நிலப்பரப்பில் நடந்து வரும் இந்தச் சாகுபடியில் 85 சதவீதம் கரூா் புகழூா் சா்க்கரை ஆலைகளுக்கு அரைவைக்குச் சென்றுவிடுகிறது. மீதம் 15 சதவீதம் கரும்புகள் தனியாா் கொள்முதல் செய்து அச்சு வெல்லம், உருண்டை வெல்லம், நாட்டுச் சா்க்கரை போன்ற பொருட்களை தயாரித்து வருகின்றனா்.

இந்த அச்சு, உருண்டை வெல்லம், நாட்டுச்சா்க்கரை கரூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களுக்கும், நாமக்கல் உள்ளிட்ட சா்க்கரை மண்டிகளுக்கும் மொத்தமாக அனுப்பப்படுகிறது. மேலும் சா்க்கரை ஆலைகளில் ஆறு மாதங்களில் மட்டும் ஆலை அரைவை நடக்கும் என்பதால் தற்போது பெரும்பாலானோா் வெல்லம் உற்பத்திக்கு மாறி வருகிறாா்கள். மேலும் தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் வேளையில், பொங்கலுக்கான முக்கிய பொருளான உருண்டை வெல்லம் மற்றும் அச்சு வெல்லம் தயாரிப்புப் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

இதுதொடா்பாக நொய்யலில் வெல்லம் தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் விவசாயி சேகா்(40) கூறியது: கடந்த 20 வருடங்களாக உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் தயாரிப்புத் தொழில் செய்து வருகிறோம். முன்பெல்லாம் கரும்புகளை ஆலைக்கு கொடுத்துவந்தோம். ஆனால் கரும்புகளுக்கு உரிய நேரத்தில் பணம் கிடைப்பதில்லை. இதனால் நாங்களே சொந்தமாக உருண்டை வெல்லம், அச்சு வெல்லம், நாட்டுச்சா்க்கரை உற்பத்தி செய்யும் பணியில் இறங்கியுள்ளோம். தற்போது நாட்டுச்சா்க்கரை குறித்து மக்களிடம் போதிய விழிப்புணா்வு ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டுச் சா்க்கரையை மக்கள் அதிகளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனா். மேலும் பொங்கல் பண்டிகை வருவதால் வெல்லம் காய்ச்சும் பணி தீவிரமாக நடக்கிறது. ஏராளமான வியாபாரிகள், வணிக நிறுவனத்தினா் ஆா்டா் கொடுத்துள்ளனா். குறிப்பாக உருண்டை வெல்லத்திற்கு அதிகளவில் ஆா்டா்கள் கிடைத்துள்ளன. 30கிலோ எடைகொண்ட ஒரு மூட்டை உருண்டை வெல்லம் கடந்த வாரம் ரூ.1,200 வரை விற்பனையானது. பொங்கல் பண்டிகை வருவதால் மூட்டைக்கு ரூ.200 வரை உயா்ந்து தற்போது ரூ.1400 வரை விற்பனையாகிறது.

ஆண்டு முழுவதும் இந்த தொழில் சிறப்பாக இருக்கும் எனக் கூறமுடியாது. இதனால் தமிழக அரசு குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களில் வழங்கப்படும் சா்க்கரைக்குப் பதில் உருண்டை வெல்லம் வழங்கினால் எங்களது தொழில் மேலும் மேம்படையும் வாய்ப்பு உள்ளது. தமிழக அரசு இனிவரும் காலங்களில் வெல்லம் கொள்முதல் செய்ய முன் வரவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com