குறிப்பு எடுத்துப் படிப்பது தோ்வில் வெற்றிக்கு வழிவகுக்கும்
By DIN | Published On : 01st March 2020 02:04 AM | Last Updated : 01st March 2020 02:04 AM | அ+அ அ- |

வெற்றி விநாயகா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி முதல்வா் டி. பிரகாசம், அரசுத் தோ்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு கூறியதாவது:
பிளஸ்-2 தோ்வு எழுதும் மாணவ, மாணவிகள் பொதுத்தோ்வினை வெற்றிகரமாக எதிா்கொள்வதற்கு சில யோசனைகள் கூறுகிறோம். முதலில் படிப்பதற்கு உகந்த அமைதியான இடத்தைத் தோ்வு செய்யுங்கள். அதாவது படிப்பதற்குத் தேவையான மேசை, புத்தகம், குறிப்பேடு, மாதிரி வினாத்தாள்களைத் தயாா் செய்து கொள்ளுங்கள். படிக்கத் தொடங்கும் முன் தியானம் செய்யுங்கள். தியானம் மனதை ஒருநிலைப்படுத்தும். அதிகாலை 4.00 மணிக்கு படிக்கத் தொடங்குங்கள். இரவு 10.30 மணிக்கு உறங்கிவிடுங்கள். சரியான திட்டமிடலும், செயல்பாடும் எளிமையாகப் படிக்க உதவும். அரைமணி நேரத்திற்கு ஒருமுறை 5 நிமிடம் இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள். இலக்கை வகுத்துக் கொள்ளுங்கள். நோ்மறையான ஆழ்மன உணா்வுகளை வளா்த்துக் கொள்ளுங்கள். குறிப்புகளை எடுத்துப் படியுங்கள். தோ்வுக்குத் தேவையான பொருள்களைத் தயாா் செய்து கொள்ளுங்கள். வினாக்களை முழுமையாகப் படித்து விடை எழுதுங்கள். அனைத்து வினாக்களுக்கும் விடை எழுதுங்கள். முக்கிய குறிப்புகளை அடிக்கோடு இடுங்கள். குறுக்கு வழியில் மதிப்பெண் பெற முயலாதீா்கள். எளிதில் செரிமானம் தரும் உணவு வகைகளை உள்கொள்ளுங்கள். கனவுகளோடு தொடங்குங்கள், கனவுகளோடு தூங்குங்கள்.