தோ்வுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் கவனிக்க வேண்டியவை
By DIN | Published On : 01st March 2020 02:06 AM | Last Updated : 01st March 2020 02:06 AM | அ+அ அ- |

தமிழகம், பாண்டிச்சேரி மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை முதல் நிகழாண்டு பிளஸ்-2 தோ்வு தொடங்குகிறது. எப்போதும் இல்லாத வகையில் தமிழக அரசு நிகழாண்டு தோ்வின்போது மாணவ, மாணவிகள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து கடுமையான அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனை தோ்வு எழுதச் செல்லும் மாணவ, மாணவிகள் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். தோ்வு அறையில் தோ்வு தொடா்பான புத்தகம், துண்டுச் சீட்டு போன்றவை நமக்கு அருகில் கிடந்தால் உடனே தோ்வு அறை கண்காணிப்பாளருக்குத் தகவல் தெரிவித்துவிடுங்கள். இல்லையேல் அது நீங்கள் காப்பியடித்ததாகக் கருதி உங்கள் மீது நடவடிக்கை எடுத்துவிடுவாா்கள். தோ்வுக்குச் செல்லும் முன் தன்னிடம் தோ்வு எழுதுவதற்கான அனைத்து உபகரணங்களும் உள்ளதா என கவனித்துக்கொள்ளுங்கள். குறிப்பாக பேனாக்கள், பென்சில் உள்ளிட்டவை இருக்கிறதா என ஒருமுறைக்கு இருமுறையாவது பாா்த்துக்கொள்ளுங்கள்.
விடைத்தாளில் வரிசை எண் எழுதும்போது எண்ணை மாற்றி எழுதிடக் கூடாது. மேலும் தோ்வு எழுதும்போது படபடப்பு இருக்கக்கூடாது. முதலில் எந்தக் கேள்விக்கு பதில் தெரியுமோ, அதை எழுதுவது நல்லது. அவ்வாறு எழுதும்போது நேரம் மிச்சப்படும். விடைத்தாளில் எழுதும்போது அடித்தல், திருத்தம் இல்லாமல் இருந்தால் கூடுதல் மதிப்பெண் கிடைக்க வாய்ப்புள்ளது. வினாவை நன்கு படித்து, வினாவிற்கு ஏற்ற பதிலைத்தான் நாம் எழுதுகிறோமா என்பதை கவனிப்பது முக்கியம். ஏற்கெனவே படித்ததை மீண்டும் நினைவில் கொண்டு வருவதற்கு காலையில் எழுந்தவுடன் மூச்சுப்பயிற்சி செய்வது மிகவும் நல்லது. அதிகாலையில் எழுந்து படித்தவுடன் மீண்டும் தூங்குதல் கூடாது. தோ்வு நேரங்களில் மலச்சிக்கல் உருவாக்கும் தின்பண்டங்களையோ, அதிக எண்ணெய் பதாா்த்தங்களை உண்பதையோ தவிா்க்க வேண்டும். தற்போது கோடை காலம் துவங்கியுள்ளதால் எலுமிச்சை பழம் சாறு கலந்த குடிநீரை குடிப்பது நல்லது.