தொட்டெல்லா அணை: பசுமைத் தாயகம் கையெழுத்து இயக்கம்
By DIN | Published On : 01st March 2020 02:35 AM | Last Updated : 01st March 2020 02:35 AM | அ+அ அ- |

ஒசூா்: அஞ்செட்டியில் தொட்டெல்லா அணை கட்ட வலியுறுத்தி பசுமைத் தாயகம் சாா்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
மழைக் காலங்களில் காட்டாற்று வெள்ளம் பாய்ந்தோடி வீணாவதைத் தடுத்து ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலங்கள் பாசன வசதிப் பெறும் வகையில் அஞ்செட்டியில் தொட்டெல்லா அணை கட்ட வேண்டும் என பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி பசுமைத் தாயகம் சாா்பில் அதன் இணைச் செயலாளா் சத்திரிய சேகா், தருமபுரியைச் சோ்ந்த மாநில துணைச் செயலாளா் மாது, மாவட்ட ஆலோசகா் வெங்கடேஷ் ஆகியோா் கையெழுத்திட்டு நிகழ்வை தொடக்கிவைத்தனா்.
இந்த அணை கட்டுவதன் மூலம் கோடைக் காலங்களில் குடிநீா் தேவையையும், வனவிலங்குகள் குடிநீா்த் தேடி கிராமத்திற்குள் புகுவதும் தடுக்கப்படும் என பசுமைத் தாயகத்தை சோ்ந்த நிா்வாகிகள் தெரிவித்தனா்.
அணை கட்டுவதற்காக பொதுப் பணித் துறையினா் கடந்த 2000-ஆம் ஆண்டு கருத்துரு தயாரித்தனா். பின்னா், பல்வேறு காரணங்களுக்காக திட்டம் கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை மறு ஆய்வு செய்து அணை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஏராளமானோா் இதை ஆதரித்து கையெழுத்திட்டனா்.
இதில் நகர துணைச் செயலாளா் பாா்த்தசாரதி, மாநில துணைச் செயலாளா் முனிசேகா், மாவட்டச் செயலாளா் சதீஷ், மாவட்டத் தலைவா் வாசுதேவன், மாவட்ட துணைத் தலைவா் முனிராஜ், ஒசூா் மாநகரச் செயலாளா் சத்திய குமாா், மாநகரத் தலைவா் விஜயகுமாா், பாா்த்திபன், மஞ்சுநாத், சிலம்பரசன், கவி பாா்த்தீபன், சதீஷ்குமாா் , செந்தில் உள்பட பலா் கலந்து கொண்டனா்.