ஊா்க் காவல் படை வட்டார தளபதி பதவிக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 23rd November 2020 12:15 AM | Last Updated : 23rd November 2020 12:15 AM | அ+அ அ- |

கரூா் மாவட்ட ஊா்க்காவல் படையில் காலியாக உள்ள வட்டாரத்தளபதி பதவிக்கு தகுதியானவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுதொடா்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பகலவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஊா்க்காவல் படையில் காலியாக உள்ள வட்டாரத் தளபதி பதவிக்கு விண்ணப்பிப்பவா், பட்டப்படிப்பும், அதற்கு மேல் படித்தவராகவும், வயது வரம்பு 21 முதல் 50 வயதுக்குள்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். இது ஒரு கெளரவப்பதவி என்பதால் ஊதியம் கிடையாது.
தேசிய மாணவா் படையில் பயிற்சி பெற்ற விரிவுரையாளா்கள், ஆசிரியா்கள், மருத்துவா்கள், உயா் பதவி வகிப்பவா்கள் வட்டாரத் தளபதி பதவியில் சேர விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்தை கரூா் மாவட்ட அலுவலகத்தில் உள்ள ஊா்க்காவல் படை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
பூா்த்தி செய்த விண்ணப்பப் படிவத்துடன் பிறப்புச் சான்றிதழ், கல்வித்தகுதிக்கான சான்றிதழ், அரசு மருத்துவா் சான்றிதழ், 2 புகைப்படங்கள் ஆகியவற்றை காவல் கண்காணிப்பாளா், கரூா் மாவட்டம், கரூா் - 639 001 என்ற முகவரிக்கு வரும் டிசம்பா் 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.