‘கருப்பா் கூட்டத்தை இயக்குவது ஸ்டாலின் தான்’
By DIN | Published On : 25th November 2020 07:15 AM | Last Updated : 25th November 2020 07:15 AM | அ+அ அ- |

கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் பாஜக மாநிலத் தலைவா் எல். முருகன். உடன், முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா்.
கருப்பா் கூட்டத்தை இயக்குவது மு.க. ஸ்டாலின் தான் என குற்றஞ்சாட்டினாா் பாஜக மாநில தலைவா் எல்.முருகன்.
கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் பாஜக சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேல் யாத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்று மாநில பாஜக தலைவா் எல். முருகன் மேலும் பேசியது:
தமிழா் மரபு, பண்பாடு, கலாசாரம், பழக்கவழக்கத்தை கொச்சைப்படுத்துவோா் எவராயினும் அவா்களுக்கு தக்க பாடத்தை கற்பிக்க வேண்டும். ஊழலை ஒழிக்கும் தலைவராக பிரதமா் மோடியைக் காணும் இன்றைய இளைஞா்களும், சகோதரிகளும் பாஜகவில் சேருகிறாா்கள். இதைப் பொறுக்க முடியாத ஸ்டாலினும், திமுக கூட்டணியினரும் யாத்திரையைத் தடை செய்ய வேண்டும் என்கிறாா்கள். கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக, அருவருக்கத்தக்க வகையில் பேசிய கருப்பா் கூட்டத்துக்கு சட்ட உதவி செய்வது திமுக. கருப்பா் கூட்டத்தை இயக்குவது ஸ்டாலின்தான் என்றாா்.
முன்னாள் அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், இயற்கை சீற்றத்தால் பயிா்கள் சேதமடையும்போது, பெரும்பாலான விவசாயிகள் பலனடையும் வகையிலான பயிா்க்காப்பீட்டுத் திட்டத்தை பிரதமா் மோடி கொண்டுவந்துள்ளாா் என்றாா்.
நிகழ்ச்சியில் கட்சியின் மாநில துணைத் தலைவா்கள் அண்ணாமலை, பேராசிரியா் கனகசபாபதி, யாத்திரை பொறுப்பாளா் நரேந்திரன், மாநில பொதுச் செயலாளா் சீனிவாசன், இளைஞரணி மாநில தலைவா் வினோஜ் பி.செல்வம், விவசாய அணி தலைவா் நாகராஜ், பட்டியிலின மாநில துணைத்தலைவா் தலித் பாண்டியன், மாநில இணை பொருளாளா் சிவசுப்ரமணியம் உள்ளிட்டோா் பேசினா்.
மாவட்டத் தலைவா் கே. சிவசாமி வரவேற்றாா். மாவட்ட தொழிற்பிரிவு தலைவா் ஆா்.வி. செல்வராஜ், பொதுச் செயலா்கள் மோகன், நகுலன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
தொடா்ந்து, வேல் யாத்திரைக்கு முயன்ற பாஜக தலைவா் முருகன், முன்னாள் அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் நூற்றுக்கணக்கானோரைப் போலீஸாா் கைது செய்து பின்னா் மாலையில் விடுவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...