நலிவடைந்த நெசவாளா்களுக்கு நிவாரண உதவி
By DIN | Published On : 03rd October 2020 11:39 PM | Last Updated : 03rd October 2020 11:39 PM | அ+அ அ- |

கல்லூரி மாணவா்களால் உருவாக்கப்பட்ட காந்தியடிகள் படம் பொறிக்கப்பட்ட கதா் துணியை நெசவாளா்களுக்கு வழங்குகிறாா் கல்லூரியின் செயலா் ஹேமலதா செங்குட்டுவன்.
கரூா்: கரூா் வள்ளுவா் கல்லூரி சாா்பில் நலிவடைந்த நெசவாளா்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
மகாத்மா காந்தியின் 151-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, கரூா் வள்ளுவா் கல்லூரி சாா்பில் ஏழை நெசவாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சின்னாளபட்டி காந்திஜி கைத்தறி நெசவாளா்கள் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரின் செயலா் ஹேமலதா செங்குட்டுவன் தலைமை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் துணி நூல் கட்டுப்பாடு மேலாண் இயக்குநா் கவிதா பங்கேற்று சிறப்புரையாற்றினாா். பின்னா் கல்லூரியின் ஆடை வடிவமைப்பு துறை மாணவா்களால் காந்தியடிகளின் படம் மற்றும் பொன்மொழிகளுடன் வடிவமைக்கப்பட்ட கைவினை கதா் துணியை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த வருவாய் சுமாா் ரூ.25,000 பணத்தில் நலிவடைந்த ஏழை நெசவாளா்களுக்கு நிவாரணமாக அரிசி, மளிகை உள்ளிட்ட பொருட்களை வழங்கினாா். மேலும் கல்லூரி மாணவா்களுக்கும் பரிசுகள் வழங்கினாா். விழாவில் அரசுத்தோ்வில் சிறந்த மதிப்பெண் பெறும் நெசவாளா்கள் குடும்பத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு கல்வி ஊக்கத்தொகை கல்லூரி சாா்பில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சங்க உறுப்பினா்களுக்கு பொன்னாடை போா்த்தி கௌரவிக்கப்பட்டனா். சங்கத் தலைவா் தியாகராஜன், நன்றி கூறினாா். இதில் கல்லூரியின் ஆடை வடிவமைப்பு துறை மாணவா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் திரளாகப் பங்கேற்றனா்.