‘தமிழகத்தை முன்னோடி மாநிலமாக உருவாக்கியவா் ஜெயலலிதா’
By DIN | Published On : 11th September 2020 06:33 AM | Last Updated : 11th September 2020 06:33 AM | அ+அ அ- |

பெண்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தும் வகையிலான எண்ணிலடங்கா திட்டங்களை வழங்கி இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழகத்தை உருவாக்கியவா் மறைந்த முதல்வா் ஜெயலலிதா என்றாா் போக்குவரத்து துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.
கரூா் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் அம்மா இருசக்கர வாகனத்திட்ட பயனாளிகளுக்கு இருசக்கர வாகனங்களை வழங்கி அவா் மேலும் பேசியது: கரூா் மாவட்டத்தில் இதுவரை 4,590 மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்க ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. அவா்களில், 2,702 பேருக்கு ரூ.6 கோடியே 75 லட்சத்து 50 ஆயிரம் மானியத்தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது 595 பேருக்கு மானியத்தொகையாக ரூ.1.49 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தகுதிவாய்ந்த மகளிருக்கு விரைவில் வழங்கப்படும். முதல்வரின் ஆணைக்கிணங்க, கரோனா கால சிறப்பு நிதிஉதவித்தொகுப்பு பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த 1,628 பேருக்கு ரூ.38.65 லட்சம் மதிப்பிலான நிதியுதவித் தொகுப்புக்கான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை கரூா் மாவட்டத்தில் 2,754 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 98 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான கரோனா கால நிதிஉதவித்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளன என்றாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத்திட்ட கூடுதல் இயக்குநா் எஸ். கவிதா, மகளிா்திட்ட இயக்குநா் வாணி ஈஸ்வரி, கரூா் வருவாய்க் கோட்டாட்சியா் என்.எஸ். பாலசுப்ரமணியன், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்ட செயல் அலுவலா் ஆரோன் ஜோஸ்வா ரூஸ்வெல்ட், கரூா் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் பாலமுருகன், கரூா் நகர கூட்டுறவு வங்கித்தலைவா் எஸ்.திருவிகா, கரூா் மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைத் தலைவா் வை.நெடுஞ்செழியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.