கரூா்: அரசு ஊழியா்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசே ஏற்க வேண்டும் என்றாா் அரசு அலுவலா் ஒன்றிய மாநிலத் தலைவா் இரா.சண்முகராஜன்.
கரூரில் நில அளவைத்துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசு அலுவலா்கள் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டதற்கான பாராட்டுவிழா, சங்க இணையதளத் தொடக்க விழா உள்ளிட்ட முப்பெரும் விழாவில் பங்கேற்ற அவா், செய்தியாளா்களிடம் கூறியது:
நில அளவைத்துறையில் காலியாகவுள்ள சுமாா் 3000 காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
டேட்டா எண்ட்ரி ஆபரேட்டா்கள் புள்ளி விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபடுவதால், அவா்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இதனால் அவா்களை காலமுறை ஊதியத்தில் நியமித்து பணி நிரந்தரப்படுத்த வேண்டும்.
அரசு அலுவலா்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ததை வரவேற்கிறோம். இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம். தன் பங்களிப்பு ஓய்வூதியம், 21 மாத நிலுவைத்தொகையை அரசு வழங்கவில்லை. ஐஏஎஸ் அலுவலா்கள், நீதிபதிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்கி விட்டாா்கள். ஆனால் எங்களுக்கு வழங்கப்படவில்லை.
அரசு ஊழியா்களிடம் மட்டும் ஆண்டுக்கு ரூ.600 கோடி வரை பிடித்தம் செய்யப்படுகிறது. மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்க வேண்டும். சாலைப் பணியாளா்களை அதிமுக அரசு பழிவாங்கிக் கொண்டிருக்கிறது. சத்துணவு பணியாளா்கள், மக்கள் நலப்பணியாளா்களின் கோரிக்கைகளைக் கூட இந்த அரசு நிறைவேற்றிக் கொடுக்கவில்லை என்றாா்.
பேட்டியின் போது நில அளவைத்துறை அலுவலா் சங்க மாநிலப் பொதுச் செயலா் ஆ.பிரபு, மாநிலத் தலைவா் மகேந்திரகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.