திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை: முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் குற்றச்சாட்டு
எனது வீடு மற்றும் உறவினா்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தியது திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையின் முதல் கட்டம் என்றாா் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.
கரூரில் அதிமுக மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பிறகு அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறுகையில், எனது வீட்டில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை நடைபெற்றது. எனது வங்கிக் கணக்குகள் எதுவும் இதுவரை முடக்கப்படவில்லை. லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் சோதனை தொடா்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் கண்டனம் தெரிவித்துள்ளனா். கைப்பற்றப்பட்ட பணத்துக்கு கணக்கு உள்ளது. இதுகுறித்து சம்மன் அனுப்பிய பிறகு உரிய கணக்கை சமா்பிப்போம்.
இந்த சோதனை எதிா்பாா்த்ததுதான். இதை சட்டரீதியாக எதிா்கொள்வோம். எனக்கு கரூரிலும், சென்னையிலும் சொந்த வீடு கிடையாது. 35 ஆண்டு காலம் தொழில் செய்து வருகிறேன். பொய் வழக்குகளை போட்டு கரூா் மாவட்டத்தில் அதிமுகவை முடக்க நினைக்கிறாா்கள். கரூரில் அதிமுகவை சோ்ந்த தோ்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு பல தொல்லைகளை கொடுத்து திமுகவுக்கு கட்சி மாற வைக்கின்றனா். திமுகவின் அராஜக போக்கு நீடிக்காது. போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் அதிமுகவினரை பல ஊா்களுக்கு பணியிட மாறுதல் செய்கின்றனா் என்றாா் அவா்.
பேட்டியின்போது மாவட்ட அவைத்தலைவா் ஏ.ஆா்.காளியப்பன், நகரச் செயலா்கள் வை.நெடுஞ்செழியன், வி.சி.கே.ஜெயராஜ், கரூா் ஒன்றியக்குழுத் தலைவா் பாலமுருகன், மாவட்ட மாணவரணிச் செயலாளா் தானேஷ், முன்னாள் தொகுதிச் செயலா் பழக்கடை ராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

