க.பரமத்தியில் திட்டப்பணிகள் தொடக்கம்
By DIN | Published On : 03rd January 2021 11:07 PM | Last Updated : 03rd January 2021 11:07 PM | அ+அ அ- |

கரூா் மாவட்டம், க. பரமத்தி ஊராட்சியில் ரூ. 97 லட்சம் மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
க. பரமத்தி ஊராட்சி ஒன்றியம், அத்திப்பாளையம், தென்னிலை கீழ்பாகம், தென்னிலை தெற்கு ஆகிய ஊராட்சிகளில் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து துறை அமைச்சா் எம். ஆா்.விஜயபாஸ்கா் ரூ.97.01 லட்சம் மதிப்பிலான பல்வேறு முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், புதிய வளா்ச்சி திட்டப் பணிகளுக்கு பூமி பூஜையிட்டு பணிகளைத் தொடங்கி வைத்தாா்.
இதில், அத்திப்பாளையம் ஊராட்சி மேட்டுக்கடையில் 15 ஆவது நிதிக்குழு நிதியில் ரூ.9.50 லட்சம் மதிப்பில் 60,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணிகள் உள்பட ரூ.77.96 லட்சம் மதிப்பில் புதிய பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதேபோல், தென்னிலை கீழ்பாகம் ஊராட்சி தெப்பம்பட்டியில் ரூ.11.17 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை என மொத்தம் ரூ.19.05 லட்சம் மதிப்பிலான முடிவுற்ற பணிகளையும் தொடக்கி வைத்தாா்.
நிகழ்வில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் இயக்குநா் எஸ்.கவிதா, க. பரமத்தி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பி. மாா்க்கண்டேயன், கூட்டுறவு சங்கப் பிரதிநிதி கமலக்கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.