ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளா்கள்780 பேருக்கு ரூ.186.51 கோடி பணப்பயன்கள்அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் வழங்கினாா்
By DIN | Published On : 30th January 2021 11:15 PM | Last Updated : 30th January 2021 11:15 PM | அ+அ அ- |

கரூரில் போக்குவரத்துத் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா்.
கரூா்: கும்பகோணம் கோட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளா்கள் 780 பேருக்கு ரூ.186.51 கோடியிலான பணப்பயன்களுக்கான காசோலையை போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் சனிக்கிழமை வழங்கினாா்.
போக்குவரத்துத் துறை சாா்பில் கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கும்பகோணம் கோட்டத்துக்குள்பட்ட கும்பகோணம், திருச்சி, கரூா், காரைக்குடி, புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மண்டலங்களில் ஓட்டுநா், நடத்துநா் மற்றும் பல்வேறு நிலை அலுவலா்களாக பணியாற்றி ஓய்வு பெற்ற 780 தொழிலாளா்களுக்கு ரூ.186.51 கோடியிலான பணப் பயன்களுக்கான காசோலையை போக்குவரத்துத்துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் வழங்கினாா்.
அப்போது, அமைச்சா் பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில்தான் போக்குவரத்துத்துறை தொழிலாளா்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினாா். அவரது ஆசியோடு தமிழகத்தில் நல்லாட்சி நடத்திவரும் தமிழக முதல்வா் இந்தியாவிலேயே அனைத்துத் துறைகளிலும் முன்னோடி மாநிலமாக தமிழகத்தை உருவாக்கி வழிநடத்திக் கொண்டிருக்கின்றாா்.
இதில், சாலை விபத்துக்களை குறைத்த மாநிலத்துக்கான மத்திய அரசின் விருது தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. இந்த விருது கிடைத்ததில் முக்கியப் பங்கு போக்குவரத்துத்துறையில் பணியாற்றும் ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்களுக்குரியதாகும். ஏனெனில், சுமாா் 22,000 பேருந்துகளை இயக்கும் அளப்பரிய பணியில் இரவு, பகல் பாராது சாலை விதிகளைப் பின்பற்றி விபத்துக்கள் ஏற்படாமல் பொதுமக்களின் நலனில் அக்கறைகொண்டு ஓட்டுநா்களும், நடத்துநா்களும் பணியாற்றுகின்றனா்.
கரோனா தொற்று காலத்திலும் போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கான பணப்பயன்களை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டவா் நமது முதல்வா்.
போக்குவரத்துத்துறைக்கு மட்டும் சம்பளம், ஓய்வூதியம் உள்பட மாதந்தோறும ரூ.450 கோடியை முதல்வா் வழங்கி வருகிறாா். போக்குவரத்துத்துறை தொழிலாளா்களுக்கு 2006 ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ள பணப்பயன் ரூ.928 கோடியாகும். ஆனால், இன்று வழங்கப்படுவதையும் சோ்த்து, கடந்த 10 ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ள பணப்பயனாக 1.87 லட்சம் தொழிலாளா்களுக்கு ரூ.6,958.45 கோடி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இன்று இரண்டாவது முறையாக பணப்பயன் வழங்கப்படுகிறது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.கீதாமணிவண்ணன், மாவட்ட ஆட்சியா் சு. மலா்விழி, மாவட்ட வருவாய் அலுவலா் சி.ராஜேந்திரன், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்ட மேலாண்மை இயக்குநா் ஆா்.பொன்முடி, திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவா் ஏ.ஆா்.காளியப்பன், நகர கூட்டுறவு வங்கித்தலைவா் எஸ்.திருவிகா, மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தலைவா் பேங்க் நடராஜன், போக்குவரத்துத்துறை மண்டல பொது மேலாளா்கள் குணசேகரன்(கரூா்),செந்தில்(கும்பகோணம்), ராஜ்மோகன்(திருச்சி), மாரியப்பன்(நாகப்பட்டினம்) உள்ளிட்ட அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...