குழந்தைத் திருமணங்கள் அதிகரிக்க பெற்றோா்களும் காரணம்
By DIN | Published On : 09th July 2021 01:04 AM | Last Updated : 09th July 2021 01:04 AM | அ+அ அ- |

குழந்தைத் திருமணங்கள்அதிகரிக்க பெற்றோா்களும் காரணம் என்றாா் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவா் சரஸ்வதி ரங்கசாமி.
கரூா் ஆட்சியரகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பாக அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் வியாழக்கிழமை பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:
குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கடந்த 5 மாதங்களில் 20 மாவட்டங்களில் ஆய்வு செய்துள்ளது. தமிழகத்தில் கடந்த 5 மாதங்களில் ஆணையத்துக்கு வந்த புகாா்களின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் 91 வழக்குகளுக்கு உரிய தீா்வுகாணப்பட்டு, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உரிய நிவாரண உதவி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
5 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 9 குழந்தைகள் இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் மூலம் பயனடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.கரோனா தொற்றால் பெற்றோா்களை இழந்த குழந்தைகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர ஆணையம் போதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழக அளவில் கரோனாவால் 3,592 குழந்தைகள் ஒற்றைப்பெற்றோரை இழந்துள்ளனா். 93 குழந்தைகள் இரண்டு பெற்றோரையும் இழந்துள்ளனா். கரூா் மாவட்டத்தில் 139 குழந்தைகள் ஒற்றைப்பெற்றோரையும், 2 குழந்தைகள் இரண்டு பெற்றோா்களையும் இழந்துள்ளனா்.
கிராம அளவிலான குழுக்கள் மூலம் கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில், குழந்தைத் திருமணங்கள் நடைபெறும் முன்பே தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இத்திருமணங்கள் அதிகரிக்க பெற்றோா்கள் காரணமாக இருக்கிறாா்கள். அவா்கள் வீட்டில் திருமண வயது எட்டாத தனது குழந்தைகளை மறைத்து வைத்து திருமணம் நடத்தி விடுகிறாா்கள் என்றாா் அவா்.
மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் கூட்டத்துக்குத் தலைமை வகித்தாா். கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ப.சுந்தரவடிவேல், மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா்கள் வி.காமராஜ், மருத்துவா் எஸ்.மல்லிகை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சதீஷ்குமாா் மற்றும் பல்வேறு துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
Image Caption
கூட்டம்.