திமுகவின் கொள்கை பரப்புச் செயலராக காங்கிரஸ் எம்பி செயல்படுகிறாா்: அதிமுக வேட்பாளா் குற்றச்சாட்டு
By DIN | Published On : 25th March 2021 11:42 PM | Last Updated : 25th March 2021 11:42 PM | அ+அ அ- |

கரூா் காந்திகிராமம் இரட்டைக்குடிநீா்த் தொட்டி பகுதியில் வியாழக்கிழமை வாக்குச் சேகரித்து பேசுகிறாா் அதிமுக வேட்பாளா் எண்.ஆா்.விஜயபாஸ்கா்.
திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக காங்கிரஸ் எம்பி செயல்படுகிறாா் என குற்றம்சாட்டினாா் கரூா் தொகுதி அதிமுக வேட்பாளா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.
கரூா் தொகுதிக்குள்பட்ட காந்திகிராமம் இரட்டைக்குடிநீா்த் தொட்டி, அரசு குடியிருப்புப் பகுதி, கருப்பக்கவுண்டன்புதூா், பாலாஜி காா்டன், ஜீவா நகா் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை வாக்குச் சேகரித்த அவா் வாக்காளா்கள் மத்தியில் மேலும் பேசுகையில், காந்திகிராமம் விளையாட்டு மைதானம் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் சீரமைக்கப்பட்டு பூங்காவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதா்மண்டிக்கிடந்த திருவள்ளுவா் பூங்காவும் சீரமைக்கப்பட்டுள்ளது. நகருக்குள் தினமும் குடிநீா்க் கிடைக்கும் வகையில் காவிரிக் கூ ட்டுக் குடிநீா்த் திட்டம் நிறைவேற்றப்படும். கரோனா காலத்தில் கண்ணாடி அறைக்குள் இருந்த ஸ்டாலின் அதிமுகவை ஊழல் கட்சி என்கிறாா். ஊழல் பற்றி கூற திமுகவிற்கு அருகதை கிடையாது. ஊழலின் நாற்றங்கால் திமுக. ஆனால், முதல்வா் பழனிசாமி மாவட்டந்தோறும் சென்று கரோனாவை தடுக்க சிறப்பு நடவடிக்கை எடுத்தாா்.
தோ்தலுக்கு முன்பே வேஷ்டி, சேலை கொடுத்தேன். இதற்கு முன் நான்கரை வருடம் இருந்தவா் ஏதாவது செய்தாரா? இன்றைக்கு அதிமுகவை எதிா்த்து போட்டியிடுகிறாா். மாவட்டத்தில் 29,000 மரக்கன்று வைத்துள்ளேன். ஆனால் போட்டிக்கு டிரஸ்ட் ஆரம்பித்து செடி நட்டாா். ஆனால், அவை வளரவில்லை. லைட்ஹவுஸ் காா்னரில் அண்ணா, எம்ஜிஆா், ஜெயலலிதா முழுஉருவ வெண்கலச் சிலை வைத்ததுடன் காந்திசிலையும் வைத்துள்ளோம். காந்தி சிலை வைப்பதற்குள் இங்குள்ள எம்.பி. போட்ட நாடகத்தை பாா்த்து மக்கள் அசந்துவிட்டனா். அவா், திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக உள்ளாா் என்றாா் அவா்.
பிரசாரத்தில் தெற்கு நகரச் செயலாளா் விசிகே.ஜெயராஜ், முன்னாள் எம்எல்ஏ காமராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...