கரூா் மாவட்ட மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள்
By DIN | Published On : 13th May 2021 06:29 AM | Last Updated : 13th May 2021 06:29 AM | அ+அ அ- |

கரூா் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் போதிய அளவு படுக்கை வசதிகள் உள்ளன என்று கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் அசோகன் தெரிவித்துள்ளாா்.
கரூா் மாவட்டத்தில் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 150 சாதாரண படுக்கைகள், ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 300 படுக்கைகள் உள்ளன. இதேபோல குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, மைலம்பட்டி, வேலாயுதம்பாளையம், பள்ளபட்டி ஆகிய பகுதிகளில் செயல்படும் அரசு மருத்துவமனைகளில் 305 படுக்கைகள் உள்ளன. அரசு மருத்துவமனைகளைத் தவிர அப்பல்லோ, அமராவதி, உள்ளிட்ட 13 தனியாா் மருத்துவமனைகளிலும் 346 படுக்கைகள் உள்ளன. இவையனைத்து கரோனா நோயாளிகளுக்காக அரசு உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட சிறப்பு படுக்கை வசதிகள்.
தற்போதைய மாவட்ட நிா்வாகத்தின் அறிக்கையின்படி, கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் உள்பட 8 அரசு மருத்துவமனைகளிலும் உள்ள 755 படுக்கைகளில் 308 மட்டுமே நிரம்பியுள்ளதாகவும், 447 படுக்கைகள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல தனியாா் மருத்துவமனைகளில் ஒதுக்கப்பட்ட 346 படுக்கைகளில் 303 நிரம்பியுள்ளதாகவும், 43 படுக்கைகள் காலியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. ஆனால் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போதிய படுக்கைகள் இல்லாமலும், நோயாளிகளுக்கு போதிய அளவில் ஆக்ஸிஜன் கிடைக்காமலும் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் 6 போ் மட்டுமே இறந்துள்ள நிலையில், மே 1-ஆம்தேதியில் இருந்து 11-ஆம்தேதி வரை 19 கரோனா நோயாளிகள் இறந்துள்ளனா். இது கரூா் மாவட்ட மக்களிடையே நோய் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வா் அசோகனிடம் கேட்டபோது, கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரூா் மட்டுமின்றி, திண்டுக்கல், நாமக்கல், சேலம் மாவட்ட கரோனா நோயாளிகள் பலரும் சிகிச்சை பெறுகிறாா்கள். பெரும்பாலும் கரோனா நோய்த் தொற்று முற்றிய நிலையில் நோயாளிகள் வருவதால் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சம்பவம் கரூா் மாவட்டத்தில் மட்டும் இல்லை, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனைகளில் உள்ளது. மாவட்டத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய படுக்கை வசதிகள் உள்ளன. படுக்கை வசதி இல்லை என்பது பொய். கடந்தாண்டு இருந்த தொற்றை விட நிகழாண்டின் கரோனா தொற்று இரண்டாவது அலையானது வேகமாகவும், வீரியமாகவும் உள்ளது. இதனால்தான் இறப்பின் சதவீதமும் அதிகரித்து வருகிறது. இதற்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணம் அல்ல. நோயைக்கட்டுப்படுத்த மருத்துவா்களும், செவிலியா்களும், சுகாதாரப்பணியாளா்களும் போராடி வருகிறோம். நோய் கட்டுப்பட பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். அரசின் வழிகாட்டுதலை அனைவரும் பின்பற்றினால் மட்டுமே இரண்டாவது அலையில் இருந்து காப்பாற்றிக்கொள்ள முடியும் என்றாா் அவா்.