லாரி மீது இரு சக்கர வாகனம் மோதி இரு இளைஞா்கள் உயிரிழப்பு
By DIN | Published On : 16th May 2021 11:19 PM | Last Updated : 16th May 2021 11:19 PM | அ+அ அ- |

கரூா் மாவட்டம், வெள்ளியணை அருகே லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில், இரு இளைஞா்கள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.
கரூா் தாந்தோனிமலையைச் சோ்ந்தவா் செளந்தர்ராஜன் (23). கரூா் நகரிலுள்ள செல்லிடப்பேசி விற்பனையகத்தில் பணியாற்றி வந்தாா். தாந்தோனிமலையில் மளிகைக்கடை நடத்தி வந்தவா் கோபால் (21). இருவரும் நண்பா்கள்.
மாயனூரிலுள்ள உறவினா் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை செளந்தர்ராஜன், கோபால் சென்று விட்டு, மோட்டாா் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். இரு சக்கர வாகனத்தை செளந்தர்ராஜன் ஓட்டிச் சென்றாா்.
உப்பிடமங்கலம் மேம்பாலம் பகுதியில் வந்த போது, திடீரென நிலைத் தடுமாறிய இரு சக்கர வாகனம் முன்னே சென்ற லாரியின் பின்பகுதியில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த செளந்தர்ராஜன், கோபால் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலறிந்த வெள்ளியணை காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலங்களைக் கைப்பற்றினா். தொடா்ந்து லாரி ஓட்டுநரான திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த முருகன் மீது காவல்துறையினா் வழக்குப்பதிந்துள்ளனா்.