கரூா் மாவட்டத்தில் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா் மெளனப் போராட்டம்
By DIN | Published On : 19th May 2021 06:34 AM | Last Updated : 19th May 2021 06:34 AM | அ+அ அ- |

கரூரில் மாவடியான் கோயில் பகுதியில் வீடுகளின் முன் கோரிக்கை அட்டையை ஏந்தி மெளன போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா்.
கரூா் மாவட்டத்தில் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா் செவ்வாய்க்கிழமை கோரிக்கைகளை அட்டைகளை ஏந்தியபடி மெளனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காஸா பகுதியில் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவத்தைக் கண்டித்தும், உடனே போரை நிறுத்த ஐ.நா. மற்றும் ஆதரவு நாடுகள் நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் பொதுமுடக்கம் கட்டுப்பாடுகளை பின்பற்றி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், கரூா் மாவட்டத்தில் கரூா், பள்ளபட்டி, அரவக்குறிச்சி, குளித்தலை உள்ளிட்ட 3,000 இடங்களில் இணையவழி மற்றும் கோரிக்கை அட்டைகளை கையில் ஏந்தியவாறு மெளனப் போராட்டம் நடத்தினா்.
கரூா் மாவடியான் கோயில் பகுதியில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத்தலைவா் மதரசாபாபு தலைமை வகித்தாா். துணைத்தலைவா் ரமலான், மாவட்டச் செயலாளா் இா்சாத் , துணைச் செயலா் காதா்பாட்சா, பொருளாளா் ஷானவாஸ், மாவட்ட மருத்துவா் அணிச் செயலாளா் ஜாகீா்உசேன் ஆகியோா் முன்னலை வகித்தனா். போராட்டத்தில் ஐக்கிய அரபு நாடுகளே நீதியை காக்க ஒன்றிணைவீா், பாலஸ்தீன மக்களுக்கு ஒன்று சோ்ந்து குரல் கொடுப்பீா் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு சமூக இடைவெளியை கடைப்பிடித்து முகக்கவசங்கள் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.