கரோனாவால் உயிரிழப்போரின் மின்மயான செலவை ஏற்ற அமைச்சா்
By DIN | Published On : 19th May 2021 06:36 AM | Last Updated : 19th May 2021 06:36 AM | அ+அ அ- |

கரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை எரியூட்டும் செலவை ஏற்றாா் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி.
கரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் சடலங்கள் கரூா் பாலம்மாள்புரத்தில் உள்ள மின்மயானத்தில் எரியூட்டப்படுகிறது. இதற்காக ரூ. 2,000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், எரியூட்டும் மையத்தில் பணியாற்றிய பணியாளா்கள் சிலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், தற்போது இந்த மையம் கரூா் நகராட்சி நகா்நல அலுவலா் மேற்பாா்வையில் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் கடந்த ஒரு வாரமாக எரியூட்ட கொண்டு வரப்படும் சடலங்களுக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என்றும், இதற்கான முழுச்செலவையும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி ஏற்றுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் கூறுகையில், கரூா் மின் மயானத்தில் சடலங்களை எரியூட்ட கட்டணம் கேட்பதாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை. நகராட்சி பணியாளா்கள் மூலமாக காலை முதல் இரவு வரை பதிவு செய்யப்பட்ட அனைத்து சடலங்களையும் தகனம் செய்து அஸ்தியை அவா்களிடத்தில் அளித்து வருகின்றனா். கரோனாவால் உயிரிழப்போரின் சடலங்களை தகனம் செய்யும் செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்கிறேன் என்றாா் அவா்.