சாலை விபத்துகளைக் குறைக்க கரூரில் முன்மாதிரித் திட்டம்

சாலை விபத்துகளில் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் ஏப். 18-ஆம்தேதி முதல் தலைக்கவசம் கட்டாயம் என்ற முன்மாதிரித் திட்டத்தை கரூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
சாலை விபத்துகளைக் குறைக்க கரூரில் முன்மாதிரித் திட்டம்
Published on
Updated on
2 min read

சாலை விபத்துகளில் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் ஏப். 18-ஆம்தேதி முதல் தலைக்கவசம் கட்டாயம் என்ற முன்மாதிரித் திட்டத்தை கரூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

சாலை விபத்துகளில் உயிரிழப்போர் பட்டியலில் உலகிலேயே இந்தியா முதலிடம் பிடித்து வருகிறது. ஆண்டுதோறும் இங்கு சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான சாலை விபத்துகள் ஏற்படுவதாகவும், அதில், 1.5 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள் என்றும் அண்மையில் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்திருந்தார்.

கடந்த 2020-இல் ஏற்பட்ட சாலை விபத்துகளில் தலைக்காயங்களால் மட்டும் 8,598 பேர் மரணமடைந்திருக்கிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவலையும் கூறியிருந்தார். 

இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஏற்பட்ட சாலை விபத்துகள் மற்றும் அதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களைக் கோரி மக்களவையில் உறுப்பினர் ஒருவர் அண்மையில் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் பல அதிர்ச்சித் தகவல்களை வழங்கியுள்ளது. அதன்படி, இந்தியாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு 4,64,910 சாலை விபத்துகளும், 2018-இல் 4,67,044 விபத்துகளும், 2019-இல் 4,49,002 சாலை விபத்துகளும் ஏற்பட்டுள்ளன.

சாலை விதிகள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாதுதான் விபத்துக்கான காரணம் என கூறப்பட்டாலும்,  தரமற்ற தலைக்கவசம் அணிந்து வாகனங்களை இயக்குவது,  தலைக்கவசம் இன்றியே இரு சக்கர  வாகனங்களில் பயணிப்பது,  மிதவேகம், மிக நன்று என்பதை மறந்து செல்வது, குறுக்குச்சாலை அல்லது பாதசாரிகள் கடக்கும் இடங்களில் வேகமாகச் செல்வது, தரமற்ற சாலைகள், தரமற்ற வாகனங்கள் போன்றவையும் விபத்துகள் ஏற்பட காரணிகளாக அமைகின்றன. பெரும்பாலும் போதையில் வாகனங்களை இயக்கி விபத்தில் சிக்கும்போது, போதையில் இருப்பவரும் உயிரிழப்பதைவிட, அவர் இயக்கும் வாகனத்தால் மற்றொருவரின் உயிர் பறிக்கப்படுவதும் வேதனைக்குரிய செயலாக இருக்கிறது. 

எனவே, தலைக்கவசம் உயிர்க்கவசம் என்பதை மக்களிடையே கொண்டு சென்று விலைமதிப்பற்ற உயிரை காப்பாற்ற தலைக்கவசம் கட்டாயம் அணிதல் வேண்டும் என்ற சிகரத்தின் இலக்கை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளார் கரூர் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் த.பிரபுசங்கர்.

இதற்காக ஏப்.18-ஆம்தேதி முதல் கரூர் மாவட்டத்தில் தலைக்கவசம் அணியாமல் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் கிடையாது, மதுக்கடைகளுக்கு செல்வோருக்கு மது கிடைக்காது, அரசு அலுவலகங்களுக்கு கூட இருசக்கர வாகனங்களில் வருவோர் தலைக்கவசம் அணிந்து வருதல் வேண்டும் என்பன போன்ற அறிவிப்பை கொடுத்து தலைக்கவசத்தின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மருத்துவர் த.பிரபுசங்கர் கூறியது: தலைக்கவசம் உயிர்க்கவசம் என ஆங்காங்கே சுவர்களில் எழுதி வைத்தோ, பள்ளி, கல்லூரி மாணவர்களைக் கொண்டு பேரணி நடத்தியோ பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அவர்கள் கண்டுகொள்வதில்லை.  சாலை விதிகள் நமக்கு அல்ல, அடுத்தவர்களுக்குத்தான் என்கிற மனப்பான்மை பொதுவாக எல்லோரிடமும் இருப்பதால்தான் விபத்துக்கள் அதிகளவில் ஏற்படுகின்றன. 

விபத்தில் ஒரு குடும்பத்தலைவனை இழக்கும்போது, அந்த குடும்பம் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதை யாரும் உணர்வதில்லை. சாலை விதிகள் நம் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டவை என்பதை அனைவரும் உணர வேண்டும். 

சிலர் கைப்பேசியில் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டுவது, சாலை வளைவுகளில் குறிப்பிட்ட வேகத்தைவிட வேகமாகச் செல்வது, விரைவாக  குறித்த இலக்கை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் வேகமாகச் செல்வது போன்ற பல்வேறு காரணங்களால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. 

இந்த விபத்துகளில் இருந்து மனித உயிரைக் காப்பாற்றவே தரமான தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாட்டை ஏப். 18-ஆம் தேதி முதல் அமல்படுத்துகிறோம். இது சுயநலத்திற்காக விதிக்கப்பட்டவை அல்ல, பொதுநலத்திற்காக என்பதை மக்கள் உணர வேண்டும்.

18-ஆம்தேதி முதல் அரசு மதுக்கடைகள் முன் அதிகாரிகள், காவலர்கள் கொண்ட குழு, இரு சக்கர வாகனத்தில் மதுவாங்க வருவோரை கண்காணிப்பார்கள். கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே மது கிடைக்கும். இதேபோல அரசு அலுவலங்களுக்கு வருவோரும் கண்காணிக்கப்பட்டு தலைக்கவசம் இல்லாமல் வந்தால் அபராதம் விதிக்கப்படும். 

இதேபோல தொழில்நகரமாக கரூரில் ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள், கொசுவலை ஏற்றுமதி நிறுவனங்கள், பேருந்துக்கு கூண்டு கட்டும் நிறுவனங்களுக்கும் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் இருசக்கர வாகனங்களில் வரும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வரவேண்டும் என நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் கூட மாணவர்களிடம் தனது பெற்றோருக்கு தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டக்கூடாது என கடிதம் எழுதும் இயக்கத்தை தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது ஒரு சிறிய முயற்சிதான். இதுபோன்ற முயற்சிகளுக்கு தமிழக முதல்வரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜியும் உறுதுணையாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார் அவர்.

இதுபோன்ற திட்டம் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டால், விபத்தில் உயிரிழப்பு இல்லாத மாநிலமாக தமிழகம்  திகழும் என்பதில் ஐயமில்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com