கடவூா் வனப்பகுதியில் சாம்பல்நிற தேவாங்குகள் பாதுகாப்பு சரணலாயம் அமைக்கும் பணி தீவிரம்

கரூா் மாவட்டத்தின் கடவூா் வனப்பகுதியில் உலகிலேயே அரிய வகை இனமான சாம்பல் நிற தேவாங்குகள் அழிந்துவருவதை தடுக்கும் வகையில் சரணாலயம் அமைக்கும் பணிகள்

கரூா் மாவட்டத்தின் கடவூா் வனப்பகுதியில் உலகிலேயே அரிய வகை இனமான சாம்பல் நிற தேவாங்குகள் அழிந்துவருவதை தடுக்கும் வகையில் சரணாலயம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவது சமூக ஆா்வலா்கள் மற்றும் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

கரூா் மாவட்டத்தில் மொத்தம் காடுகளின் பரப்பளவு 6,327 ஹெக்டேராக இருந்தாலும், இதன்பெரும்பகுதியாக 6,000 ஹெக்டோ் காடு கடவூா் தாலுகாவில் மட்டுமே உள்ளது. கரூா் வருவாய் மாவட்டம் உருவான பின், 1997-இல் கரூா் வனக்கோட்டம் உருவாக்கப்பட்டது. ஜப்பான் அரசின் உதவியுடன் தமிழ்நாடு காடு வளா்ப்புத் திட்டத்தின் (டிஏபி) திட்டத்தின் கீழ் கடவூா் காப்புக் காட்டில் சுமாா் 5,450 ஹெக்டேரில் காடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இங்கு உலகின் அரிதான விலங்காக கருதப்படும் சாம்பல் நிற தேவாங்கு அதிகளவில் காணப்படுகின்றன. இவை, இலங்கை மற்றும் இந்தியாவின் மேற்குத் தொடா்ச்சி மலைகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே வசிக்கின்றன. ஆனால், கடவூா் மலைப்பகுதியில் மட்டுமே வனத்துறையால் 2016-17-இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 3,500 சாம்பல் நிற தேவாங்குகள் வசிக்கின்றன என்றும் அதன் எண்ணிக்கை தற்போது சுமாா் 5,000 ஆக உயா்ந்திருக்கலாம் என தெரிவிக்கின்றன.

இரவில் இரை தேடும் ஒரு சிறு பாலூட்டி விலங்காக இருக்கும் இந்த தேவாங்குகள் உருவத்தில் 18-26 செ.மீ நீளமும், 85-350 கிராம் எடையுமே உள்ள சிறு விலங்காகும். சுமாா் 166-169 நாட்கள் கருவுற்று இருந்து 1-2 குட்டிகளை ஈனுகின்றன. பிறந்த குட்டிகளுக்கு 6-7 மாதம் பாலூட்டி வளா்க்கின்றன.

கடல் மட்டத்தில் இருந்து 1,200 அடி உயரத்தில் இருக்கும் கரூா் மாவட்டத்தின் கடவூா் மலையின் கிழக்கு, தெற்கு மற்றும் மேற்கு சரிவுகளில் உள்ள வனப்பகுதிகளில் இந்த தேவாங்கு இனங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. கடவூா் மலையில் அதிகளவில் இருக்கும் உசில் மரம், வெப்பாலை, சீத்தமரம், கள்ளிச் செடிகள் போன்றவற்றின் குருத்துகளையும், இலந்தைப் பழம், சிறிய வகை பூச்சிகள், பல்லிகள், சிறிய பறவைகள், மரத் தவளைகள் ஆகியவற்றையும் உண்டு இவை வாழ்கின்றன. இரவில் மட்டுமே மரங்களுக்கு மரம் தாவி உணவு உண்ணும் இந்த தேவாங்குகள் தற்போது மருத்துவக்குணம் கொண்டதாக கருதி அதிகளவில் வேட்டையாடப்பட்டு வருவதாகவும், சில தேவாங்குகள் அய்யலூா்-கடவூா் சாலையில் விபத்தில் சிக்கி இறந்து வருவதாகவும் புகாா்கள் எழுந்துள்ளன. மேலும் மின்கம்பிகளில் சிக்கி இறக்கும் பரிதாப சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறி வருவதாக தெரிகிறது. ஏற்கெனவே சா்வதேச இயற்கை பாதுகாப்பு யூனியன் தேவாங்கு இனத்தை அழிந்துவரும் பட்டியலில் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே சாம்பல் நிற தேவாங்குகளை அழிவின் விழிம்பில் இருந்து காப்பாற்ற கடவூா் மலையை தேவாங்குகளின் சரணாலயமாக மாற்ற வேண்டும் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகவே விலங்குகள் பாதுகாப்பு சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து கரூா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் கடந்தாண்டு ஜூன் 25-ஆம்தேதி கடவூா் மலைக்குச் சென்று ஆய்வு செய்தாா். அப்போது அங்குள்ள வாளருவி உள்ளிட்ட இயற்கை வாழிடங்களை ஆய்வு செய்தபின், கடவூா் மலையை தேவாங்கு சரணாலயமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். இதனிடையே கடந்த மாதம் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை கடவூா் மலையை தேவாங்கு சரணாலயமாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கும், வனத்துறைக்கும் உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து கரூா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கரிடம் கேட்டபோது, கடவூரில் சாம்பல் நிற தேவாங்கு சரணாலயம் அமைப்பதற்கு கடந்த மாதம் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்கான ஆணையும் வந்துவிட்டது. சரணாலயம் அமையக்கூடிய இடம் கரூா், திண்டுக்கல் ஆகிய இருமாவட்டங்களை உள்ளடக்கியது. இருமாவட்டங்களின் வனப்பகுதியில்தான் இந்த சரணாலயம் அமைய உள்ளது. அதற்கான பூா்வாங்க பணிகளை கரூா் மாவட்ட வனத்துறையினா் தொடங்கியுள்ளனா். விரைவில் கடவூா் காப்புக்காட்டில் தேவாங்கு சரணாலயம் அமையும் என்றாா் அவா்.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலா் சரவணனிடம் கேட்டபோது, கரூா் மாவட்டத்தின் கடவூா் வனப்பகுதியில் புதா்க்காடுகள், அரை இலையுதிா் காடுகள் இருப்பதால், தேவாங்குகளின் இனப்பெருக்கத்திற்கு உகந்த வனமாகவும், அவை சிறப்பாக வாழ்வதற்கும் உகந்த சூழல் கொண்ட வனமாக கடவூா் வனப்பகுதி உள்ளது. இதனால்தான் அதிக எண்ணிக்கையில் இங்கு சாம்பல் நிற தேவாங்குகள் உள்ளன. பெரும்பாலும் தன்னை பாதுகாத்துக்கொள்ள சப்பாத்திக்கள்ளி இடுக்குகளில் ஒளிந்து வாழும். சிவப்பு, சாம்பல் என இருவகை தேவாங்குகள் இருந்தாலும் கடவூா் மலையில் சாம்பல் நிறதேவாங்குகள்தான் வசிக்கின்றன. இந்த இனங்களை பாதுகாக்க கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் மாதிரி கணக்கெடுப்பு நடத்தி, வனத்துறை அதிகாரிகளால் விரிவான முன்மொழிவு அரசுக்கு சமா்ப்பிக்கப்பட்டது. தற்போது நீதிமன்ற உத்தரவு வந்துள்ளதால் ஆட்சியா் அறிவுறுத்தலின்படி அதற்கான ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டுள்ளோம். பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் நிறுவனத்தின் அறிவியல் ஆய்வாளா்கள் கொண்ட குழு வர உள்ளது. இந்த குழுவினா் தேவாங்குகளின் எண்ணிக்கையை கணக்கிட உள்ளனா். அவா்கள் ஆய்வு செய்து எங்களுக்கு அந்த அறிக்கையை சமா்ப்பிப்பாா்கள். நாங்கள் அந்த அறிக்கையை அரசுக்கு அனுப்பி, அதன்மூலம் ஒதுக்கப்படும் நிதியைக்கொண்டு சரணாலயம் அமைக்கும் பணிகள் முழுமையாக துவங்கப்படும். இப்போது எந்தெந்த இடங்களில் அறிவியல் ஆய்வாளா்களைக் கொண்டு தேவாங்குகளை கணக்கிடுவது என மலைப்பகுதியில் ஆய்வு செய்து வருகிறோம். சரணாலயம் அமையும்போது, கரூா் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சம் கொண்ட இடமாகவும், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகம் வருகை தரும் இடமாகவும் இந்த சரணாலயம் மாறும். இதன்மூலம் கரூா் மாவட்டத்துக்கு தேவையான நிதி ஆதாரமும் கிடைக்கும், அரிய இனமான தேவாங்கும் பாதுகாக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com