அணைப்புதூா் தடுப்பணையை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
By DIN | Published On : 09th December 2022 12:00 AM | Last Updated : 09th December 2022 12:00 AM | அ+அ அ- |

கரூா் மாவட்டம், க. பரமத்தி அருகே அணைப்புதூரில் உள்ள தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூா் மாவட்டம், சின்னதாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்துவதற்காக அணைப்புதூா் பகுதியில் அமராவதி ஆற்றின் கரையோரத்தில் ஆங்கிலேயா்கள் காலத்தில் தடுப்பணை கட்டப்பட்டது. இந்த அணைப் பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு தடுப்புச் சுவரும் கட்டப்பட்டது.
இந்த அணை மூலம் நடந்தை, சூடாமணி, ஆரியூா் மற்றும் அணைப்பாளையம் பகுதிகளில் விவசாயத்துக்கு தண்ணீரும், பொதுமக்களின் குடிநீருக்கும் ஆதாரமாகவும் இருந்தது.
தற்போது, இந்த அணை பராமரிப்பின்றியும், தூா்வாராப்படாமலும் உள்ளது. மேலும், நீா்வரத்து பகுதியில் பல்வேறு தாவரங்கள் ஆக்கிரமித்துள்ளது. இதனால் அமராவதி ஆற்றில் இருந்து பாசனத்துக்காக வெளியேற்றப்படும் தண்ணீா் தடுப்பணையை மீறி மீண்டும் அமராவதி ஆற்றுக்கே செல்லும் நிலை உள்ளது.
கடந்த மாதம் இந்த தடுப்பணையை ஆய்வு செய்த அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ அணைப்புதூா் தடுப்பணையிலிருந்து சுமாா் 6 கி.மீ. தொலைவுக்கு தண்ணீரை பம்பிங் செய்து அங்கிருந்து இயற்கையாக செல்லும் காட்டாறு மூலம் கரூா் அருகே சுமாா் 300 ஏக்கா் பரப்பளவில் உள்ள தாதம்பாளையம் ஏரிக்கு தண்ணீரை கொண்டு செல்வதற்காக ஆய்வு நடத்தியுள்ளாா். ஆகவே, அணைப்புதூரில் உள்ள தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.