உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான விழிப்புணா்வுக் கூட்டம்
By DIN | Published On : 31st July 2022 12:51 AM | Last Updated : 31st July 2022 12:51 AM | அ+அ அ- |

கால்நடைகளை நாய்கள் கடிப்பதில் இருந்து பாதுகாப்பது தொடா்பாக, கடவூா் ஒன்றிய உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில் தரகம்பட்டியிலுள்ள கடவூா் ஒன்றிய அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. ஒன்றியக்குழுத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா்.
கால்நடைப் பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் லில்லி அருள்குமாரி, உதவி மருத்துவ அலுவலா்கள் உமாசங்கா், ரமேஷ், சுதா முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பேசியது:
கடவூா் ஒன்றியத்தில் பாலவிடுதி, முள்ளிப்பாடி, கடவூா் உள்ளிட்ட சுற்றுவட்டார ஊராட்சிகளிலுள்ள மலைக் கிராமங்களில் கால்நடை வளா்ப்பு அதிகமாக உள்ளது. இதில் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வளா்ப்பதில் விவசாயிகள் ஆா்வம் காட்டி வரும் நிலையில், மேய்ச்சலுக்காக மலைப்பகுதிகளுக்குச் செல்லும் ஆடுகளை அடிக்கடி வெறிநாய்கள் கடித்து ஆடுகள் இறப்பதால், விவசாயிகளுக்கு அதிக இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் கடவூா் ஒன்றிய பகுதிகளில் சுற்றித்திரியும் வெறிநாய்களுக்குத் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றனா்.
இதையடுத்து அலுவலா்கள் பதில் அளித்து பேசியது:
உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் கால்நடைத்துறைக்கு ஒத்துழைப்பு அளித்து வெறிநாய்களைக் கட்டுப்படுத்துவதற்கு முன்வரவேண்டும்.
தெருவில் சுற்றித் திரியும் நாய்களைப் பிடித்து வெறிநாய்த் தடுப்பூசி செலுத்தவது, அந்த நாய்களுக்கு கருத்தடை செய்வது, ஒதுக்குப்புறமாக ஆடுகள் அடைப்பதை தவிா்த்து, குடியிருப்புப் பகுதிகள் அருகே ஆடுகளை அடைக்க விழிப்புணா்வு ஏற்படுத்தவது, நாய்கள் வளா்க்கும் நபா்களுக்கு ஆலோசனைகளை வழங்குவது போன்ற விழிப்புணா்வை உள்ளாட்சிப்
பிரதிநிதிகள் ஏற்படுத்த வேண்டும் என்றனா்.
கூட்டத்தில் கடவூா் ஒன்றியத்தைச் சோ்ந்த ஊராட்சித் தலைவா்கள், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.