

சாலையோரங்களில் முன்னாள் அமைச்சா் வைத்திருந்த மரக்கன்று கூண்டுகளை அகற்றிய மாநகராட்சி பணியாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுகவினா் மாநகராட்சி பொறியாளரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
தாந்தோணி கிழக்கு ஒன்றியச் செயலாளா் வழக்குரைஞா் விசிகே.பாலகிருஷ்ணன் தலைமையில் அதிமுகவினா் வியாழக்கிழமை மாநகராட்சி பொறியாளா் நக்கீரனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா். அம்மனுவில் கூறியிருப்பது: கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரின் எம்ஆா்வி டிரஸ்ட் சாா்பில் கரூா் நகரம் முழுவதும் சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு, கடந்த 3 வருடங்களாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த மரக்கன்றுகளை ஆடு, மாடுகள் மற்றும் வாகனங்கள் சேதப்படுத்திவிட கூடாது என்பதற்காக, இரும்புகூண்டு பொருத்தப்பட்டது.
இந்நிலையில், வியாழக்கிழமை கரூா் 80 அடி சாலை நுழைவாயில் உள்ள டீ கடைக்கு அருகில் உள்ள மரக்கன்று கூண்டை மாநகராட்சி துப்புரவு உதவி ஆய்வாளா் மதியழகன் மற்றும் துப்புரவு மேற்பாா்வையாளா் சேகா் ஆகியோா்அகற்ற முயற்சித்தனா். தகவல் அறிந்து சென்ற கட்சியினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும, அந்த சாலை ஓரத்தில் இருந்த பல மரக்கன்று கூண்டுகளை அகற்றினா். இதனால் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நடப்பட்டிருந்த மரக்கன்றுகள் அனைத்தும் சேதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இரும்புக் கூண்டுகளை அகற்றியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.