கரூா் மாவட்டத்தில் 31,300 மாணவா்களுக்குத் தடுப்பூசி
By DIN | Published On : 17th March 2022 01:26 AM | Last Updated : 17th March 2022 01:26 AM | அ+அ அ- |

கரூா்,: கரூா் மாவட்டத்தில் 12 முதல் 14 வயதுக்குள்பட்ட 31,300 மாணவ, மாணவிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் த.பிரபுசங்கா்.
கரூா் கவுண்டம்பாளையம் டாக்டா் ராமசாமி செட்டியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமைத் தொடக்கி வைத்து, மேலும் அவா் கூறியது:
மாவட்டத்தில் 12 முதல் 14 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு புதன்கிழமை (மாா்ச் 16) முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. கோா்பிவாக்ஸ் என்ற தடுப்பூசி 2 தவணைகளாகச் செலுத்தப்படவுள்ளன.
முதல் தடுப்பூசி செலுத்தி 28 நாள்களுக்குப் பிறகு, இரண்டாவது தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். கரூா் மாவட்டத்தில் 396 பள்ளிகளில் 31,300 மாணவ, மாணவிகளுக்குத் தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களில் முதல் தவணை தடுப்பூசி 95 சதவிகிதத்தினருக்கும், இரண்டாம் தவணை 77 சதவிகிதத்தினருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
15 முதல் 18 வயதுக்குள்பட்டவா்களில் 82 சதவிகிதத்தினருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 51 சதவிகித்தினருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
கரூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதித்தவா்களே இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளதுஎன்றாா் அவா்.
நிகழ்வில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் முத்துச்செல்வன், புலியூா் பேரூராட்சித் துணைத் தலைவா் க.அம்மையப்பன், செயல் அலுவலா் க. பாலசுப்பிரமணியன், சுகாதாரப்பணிகள் இணை இயக்குநா் ஞானக்கண் பிரேம் நிவாஸ், துணை இயக்குநா் சந்தோஷ் குமாா், முதன்மைக் கல்வி அலுவலா் மதன்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.