மேலப்பாளையம் கிராமசபைக் கூட்டத்தில் வாக்குவாதம்
By DIN | Published On : 02nd May 2022 12:20 AM | Last Updated : 02nd May 2022 12:20 AM | அ+அ அ- |

கரூா் மேலப்பாளையம் கிராமசபைக் கூட்டத்தில் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை எனக்கூறி பொதுமக்கள், தலைவா் மற்றும் அலுவலா்களுடன்கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
தாந்தோணி ஒன்றியம், மேலப்பாளையம் ஊராட்சிக்கான கிராமசபைக்கூட்டம் ஊராட்சித் தலைவா் வெண்ணிலை தலைையில் வடக்குப்பாளையத்தில் நடைபெற்றது. பொதுமக்கள் சாா்பில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்க முன்னாள் தலைவா் ஸ்டாலின்பேசுகையில்,
ஊராட்சியில் மொத்தம் 9 உறுப்பினா்கள் உள்ளனா். ஆனால் கூட்டத்திற்கு 2 போ் மட்டுமே வந்துள்ளனா். வட்டார வளா்ச்சி அலுவலா்களும் வருவதில்லை.
இந்த ஊராட்சியில் வடக்குப்பாளையம், குமரன்குடில், தொழிற்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. குமரன்குடில், குமரன் லேஅவுட் பகுதியில் குடிநீா்த் தொட்டி கட்டித்தரக்கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கழிவுநீா் வசதியும் இல்லை. எந்தவித அடிப்படை வசதியும் இல்லை என்றாா். இதே கோரிக்கையை அனைத்து பொதுமக்களும் வைத்தனா்.
இதனிடையே திட்டங்கள் ஏதும் நிறைவேற்றப்படவில்லையா என அலுவலா்களிடம் கேட்க,
பொதுமக்கள்- அலுவலா்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா் சமாதானம் அடைந்து, பொதுமக்களின் கோரிக்கைகள் தீா்மானமாக நிறைவேற்றப்பட்டதையடுத்து தொடா்ந்து கூட்டம் நடைபெற்றது.