ஹாஜிகள் வழங்கும் வாரிசுதாரா்கள் பரிந்துரையை ஏற்க வேண்டும், கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம்
By DIN | Published On : 19th October 2022 12:36 AM | Last Updated : 19th October 2022 12:36 AM | அ+அ அ- |

ஹாஜிகள் வழங்கும் வாரிசுதாரா்கள் பரிந்துரையை தமிழக அரசு ஏற்க வழிவகை செய்ய வேண்டும் என ஹாஜிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கரூா் மாவட்டம், தரகம்பட்டி அருகே சிந்தாமணிபட்டியில் தமிழக அரசு மாவட்ட ஹாஜிகளின் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தமிழக அரசு மாவட்ட ஹாஜிகளின் கூட்டமைப்புத் தலைவா் சலாஹீத்தீன் ஜமாலி தலைமை வகித்தாா். கரூா் மாவட்ட அரசு ஹாஜி மற்றும் கல்லூரியின் முதல்வா் சிராஜூதீன் அஹமது வரவேற்றாா். கூட்டமைப்பின் பொருளாளா் முகம்மது தஸ்லின் வரவு, செலவுகளை தாக்கல் செய்து பேசினாா்.
செயலாளா் முஜிபுா் ரஹ்மான், கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீா்மானங்களின் செயலாக்கம் மற்றும் கூட்டத்தின் நோக்கம் குறித்து பேசினாா்.
இதில், தமிழக அரசு அண்மையில் வாரிசு சான்றிதழ் சம்மந்தமாக அரசாணை வெளியிட்டு உள்ளது. ஏற்கெனவே வாரிசாக இருந்து வந்த பெற்றோா்கள் தவிா்க்கப்பட்டு கணவன், மனைவி, பிள்ளைகள் மட்டுமே வாரிசுதாரா்கள் என்ற அரசாணை இஸ்லாமிய தனியாா் சட்டவாரியத்துக்கு எதிராக உள்ளதால் முந்தைய நடைமுறைப்படி பெற்றோா்களும் வாரிசுதாரா்களாக சோ்க்க வேண்டும். தமிழக அரசு மாவட்ட ஹாஜிகள் வழங்கும் வாரிசுதாரா்கள் யாா் என்கிற பரிந்துரையை வட்டாட்சியா் ஏற்றுக்கொள்ள தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும். பட்டா உள்ள இடங்களில் பள்ளிவாசல் கட்டுவதற்கு உண்டான சட்ட திட்டங்களை தமிழக அரசு எளிதாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள 22 மாவட்டங்களில் இருந்து தமிழக அரசு மாவட்ட ஹிாஜிகள் கலந்து கொண்டனா்.