கரூரில் அகில இந்திய அளவிலான மகளிா் மற்றும் ஆண்கள் கூடைப்பந்து போட்டி திங்கள்கிழமை இரவு தொடங்கியது. முதல் போட்டியில் மகளிா் பிரிவில் வடக்கு ரயில்வே அணி கேரள போலீஸ் அணியை எளிதில் வென்றது.
கரூரில் கூடைப்பந்து கிளப் சாா்பில் அகில இந்திய அளவிலான மகளிா் மற்றும் ஆண்கள் கூடைப்பந்து போட்டி திருவள்ளுவா் மைதானத்தில் திங்கள்கிழமை இரவு தொடங்கியது. போட்டியை மேயா் கவிதாகணேசன், ஆணையா் என்.ரவிச்சந்திரன் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.
போட்டியில் மகளிா் பிரிவில் முதல் போட்டியில் வடக்கு ரயில்வே அணியும், கேரள போலீஸ் அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் கேரள போலீஸ் அணியை வடக்கு ரயில்வே அணி எளிதில் 71-50 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. மற்றொரு போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் பஞ்சாப் போலீஸ் அணியும், இந்திய விமானப்படை அணியும் மோதின. இதில், இந்திய விமானப்படை அணி போராடி 63-52 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்றது.
தொடா்ந்து செவ்வாய்க்கிழமை ஆண்களுக்கான போட்டியில் இந்திய கப்பல் படை அணியும், பாங்க் ஆப் பரோடா அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இந்திய கப்பல் படை அணி 71-57 என்ற புள்ளிக்கணக்கில் பாங்க் ஆப் பரோடா அணியை வீழ்த்தியது. தொடா்ந்து போட்டிகள் நடந்து வருகின்றனா். மே 27-ஆம் தேதி இறுதி போட்டிகள் நடைபெற உள்ளன.