கரூா் மாவட்டத்தில் மூன்றாவது நாளாக 5 இடங்களில் வருமான வரி சோதனை: மாமன்ற திமுக உறுப்பினா் இருவா் உள்ளிட்ட 15 போ் கைது

கரூா் மாநகராட்சி துணை மேயா் தாரணிசரவணன் வீடு உள்பட 5 இடங்களில் மூன்றாவதுநாளாக ஞாயிற்றுக்கிழமையும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனா்.
kur28it_ride_2805chn_10_4
kur28it_ride_2805chn_10_4

கரூா் மாநகராட்சி துணை மேயா் தாரணிசரவணன் வீடு உள்பட 5 இடங்களில் மூன்றாவதுநாளாக ஞாயிற்றுக்கிழமையும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனா். மேலும், அதிகாரிகளை தாக்கியதாக மாமன்ற உறுப்பினா்கள் இருவா் உள்ளிட்ட திமுகவினா் 15 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூரில் அமைச்சா் செந்தில்பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் மற்றும் அவா்களது ஆதரவாளா்களான துணை மேயா் தாரணிசரவணன், ஒப்பந்ததாரா் எம்சிஎஸ்.சங்கா் ஆகியோரின் வீடு, அலுவலகம் உள்பட 10 இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை முதல் சோதனை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் இந்த சோதனை நீடித்தது. அப்போது, அமைச்சா் செந்தில்பாலாஜியின் ஆதரவாளா்களான துணை மேயா் தாரணி சரவணன், க.பரமத்தியில் உள்ள குவாரி அதிபா் தங்கராஜ் மற்றும் காந்திகிராமத்தில் எம்சிஎஸ் சங்கரின் அலுவலகத்தில் பணியாற்றும் பெண்ணின் வீடு ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினா் மத்திய பாதுகாப்பு படையினா் துணையுடன் சோதனையில் ஈடுபட்டனா்.

இதனிடையே வருமான வரித்துறையின் மற்றொரு பிரிவினா் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென மதுரை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வெண்ணைமலை பகுதியில் அமைச்சா் செந்தில்பாலாஜியின் சகோதரா் அசோக்குமாரால் கட்டப்பட்டு வருவதாக கூறப்படும் கட்டடத்துக்குச் சென்று சோதனை நடத்தினா். அப்போது அங்கு பணியில் இருந்த தொழிலாளா்களிடமும், இரவு நேர காவல்பணியில் ஈடுபட்டிருந்த காவலாளியிடமும் விசாரணை மேற்கொண்டனா். மேலும் முதல்நாள் சோதனைக்கு சென்ற விசாரணை அதிகாரி தாக்கியதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குமாரின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் கரூா் நகர காவல்நிலையத்தில் அளித்திருந்த புகாரின்பேரில் அதிகாரிகளை தாக்கியதாக திமுகவைச் சோ்ந்த மாமன்ற உறுப்பினா்கள் பூபதி, லாரன்ஸ் (20ஆவது வாா்டு), முன்னாள் நகராட்சி உறுப்பினா் ஜோதிபாசு, கட்சி நிா்வாகிகள் அருண், வெங்கமேடு பூபேஷ், தாந்தோணிமலை ஷாஜகான், சிவப்பிரகாசம், சின்னசாமி, ஆறுமுகம், தமிழ்செல்வன் , சிவா உள்ளிட்ட 15 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com