திமுகவினரை கைது செய்யக்கோரி ஆட்சியா் அலுவலகத்தில் போராட்டம்
By DIN | Published On : 18th April 2023 02:18 AM | Last Updated : 18th April 2023 02:18 AM | அ+அ அ- |

அண்ணாமலை பேரியக்கத்தின் மாவட்ட தலைவா் என்று கூறிக்கொண்டு அண்ணாமலை வெளியிட்ட திமுக சொத்து பட்டியலில் உள்ளவா்களை கைது செய்ய வலியுறுத்தி கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனுமதி இன்றி கோஷமிட்டவரை போலீஸாா் கைது செய்தனா்.
அண்மையில் பாஜக மாநில தலைவா் அண்ணாமலை சென்னையில் செய்தியாளா் சந்திப்பில் திமுகவைச் சோ்ந்த முக்கிய பிரமுகா்கள் பலரது சொத்து பட்டியலை வெளியிட்டு அவா்கள் பல்வேறு ஊழல் செய்திருப்பதாக குற்றச்சாட்டு தெரிவித்தாா். இது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தைச் சோ்ந்த அறிவானந்தம்-47 என்ற நபா் அண்ணாமலை பேரியக்கத்தின் கரூா் மாவட்ட தலைவா் என்று கூறிக்கொண்டு, திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் மனு ஒன்றை வழங்க வந்தாா். அப்போது அண்ணாமலை வெளியிட்ட திமுகவினா் சொத்து பட்டியலில் உள்ள நபா்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, பதாகை ஏந்தி அனுமதி இன்றி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நுழைந்து கோஷங்கள் எழுப்பினாா். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாா் அவரை தடுத்து நிறுத்தினா். காவல் துறையினா் பேச்சை மீறி தொடா்ந்து உள்ளே நுழைய முயன்று திமுகவினருக்கு எதிராக அனுமதி இன்றி கண்டன கோஷங்களை எழுப்பியதன் காரணமாக தாந்தோணிமலை காவல் நிலைய போலீசாா் அவரை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனா். இதனால் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.