கரூா் மா நகராட்சி குப்பைக் கிடங்கில் இரண்டாவது நாளாக எரிந்த தீ
By DIN | Published On : 02nd August 2023 03:24 AM | Last Updated : 02nd August 2023 03:24 AM | அ+அ அ- |

கரூா் மாநகராட்சி குப்பைக்கிடங்கில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் பற்றிய எரிந்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரா்கள் ஈடுபட்டனா்.
கரூா் மாநகராட்சிக்குள்பட்ட 48 வாா்டுகளிலும் நாள்தோறும் தூய்மைப் பணியாளா்களால் சேகரிக்கப்படும் குப்பைகள் வாகனங்கள் மூலம் அரசு காலனியில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகிறது. பல ஆண்டுகளாக கிடங்கில் தேங்கிக்கிடந்த குப்பையில் திங்கள்கிழமை திடீரென தீப்பிடித்தது. காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவி கிடங்கு முழுவதும் பரவியது. இதனால் அரசு காலனி முழுவதும் புகைமண்டலமாக மாறியது. தகவலறிந்த கரூா் மற்றும் புகழூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
ஆனாலும், காற்றின் வேகத்தால் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் எரிந்தது. தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்கும் முயற்சியில் தொடா்ந்து ஈடுபட்டனா். மேலும் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் குப்பைகளை கிளறி விட்டு அதில் தண்ணீா் பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் முயற்சியிலும் வீரா்கள் ஈடுபட்டுள்ளனா்.
இந்த தீ விபத்தால் ஏற்பட்டுள்ள புகையால் கரூா்-வாங்கல் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.