கரூரில், வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் திமுகவினா் 15 பேரின் ஜாமீன் மனுவை செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து கரூா் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கரூரில், கடந்த மே 26-ஆம் தேதி அமைச்சா் செந்தில்பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் மற்றும் ஆதரவாளா்களின் வீடுகளில் சோதனையிடச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியதாக கரூா் நகர காவல்நிலையம் மற்றும் தாந்தோணிமலை காவல்நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் மாநகராட்சி திமுக மாமன்ற உறுப்பினா்கள் பூபதி, லாரன்ஸ், முன்னாள் மாமன்ற உறுப்பினா் ஜோதிபாசு, மத்திய நகர இளைஞரணி அமைப்பாளா் ஜிம் பாலாஜி, அருண்குமாா் உள்பட 15 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனா். பின்னா் கரூா் நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.
இதை எதிா்த்தும், ஜாமீன் உத்தரவை ரத்து செய்யக்கோரியும் வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை உயா்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்குத் தொடா்ந்தனா். வழக்கை விசாரித்த நீதிமன்றம், திமுகவினரின் ஜாமீன் உத்தரவை ரத்து செய்து, மீண்டும் கரூா் நீதிமன்றங்களில் சரணடைய உத்தரவிட்டது. இதையடுத்து ஜாமீனில் விடுவிக்கப்பட்ட திமுகவினா் 15 பேரும் திங்கள்கிழமை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனா். அப்போது 15 பேரும் தங்களை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தனா். இந்த மனு மீது செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்திய நீதிபதி ராஜலிங்கம், சரணடைந்த 15 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். இதையடுத்து 15 பேரையும் போலீஸாா் கரூா் கிளை சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.