கரூரில் ஆட்சிமொழிக் கருத்தரங்கம்
By DIN | Published On : 09th August 2023 01:15 AM | Last Updated : 09th August 2023 01:15 AM | அ+அ அ- |

கரூா்: கரூரில் தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு அலுவலா்கள், பணியாளா்கள், கல்லூரி மாணவா்கள், தமிழறிஞா்கள், தமிழாா்வலா்களுக்கு ஆட்சிமொழிக் கருத்தரங்க வகுப்புகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கரூா் தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற வகுப்பை மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன் தொடக்கி வைத்தாா்.
இதில், கருணாநிதி நிகழ்த்திய செம்மொழிச் செயற்பாடுகள் என்ற தலைப்பில் கரூா் அரசு கலைக்கல்லூரி தமிழாய்வுத்துறை உதவிப்பேராசிரியா் சுந்தரமும், காலந்தோறும் தமிழ் ஆட்சிமொழி வரலாறு என்ற தலைப்பில் தமிழாய்வுத்துறை உதவிப்பேராசிரியா் முனைவா் கொடியரசும், திரைப்படங்களில் தமிழ் வளா்ச்சி என்ற தலைப்பில் குளித்தலை டாக்டா் கலைஞா் அரசு கலைக் கல்லூரி தமிழாய்வுத்துறை கௌரவ விரிவுரையாளா் முனைவா் கோபாலகிருஷ்ணனும், அரசுப் பணியாளா்களும் ஆட்சிமொழிச் சட்டமும் என்ற தலைப்பில் அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழாய்வுத்துறை இணைப்பேராசிரியா் முனைவா் சுதாவும் பேசினா்.
மேலும் கணினித் தமிழ் என்ற தலைப்பில் நவலூா்குட்டப்பட்டு, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமித்துறை இணையத்தமிழ் ஆய்வாளா் முனைவா் துரை.மணிகண்டனும், மொழிப்பயிற்சி என்ற தலைப்பில் தமிழ்ச்செம்மல் புலவா் ப.எழில்வாணனும் பேசினா். பயிற்சியில் கரூா் மாவட்ட அரசு அலுவலகங்களிலிருந்து அலுவலா் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா். இவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.
நிகழ்வில் தாந்தோணி அரசு கலைக் கல்லூரியின் முதல்வா் முனைவா் அலெக்சாண்டா், தமிழ் வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் ஜோதி மற்றும் தமிழறிஞா்கள், தமிழாா்வலா்கள் கலந்துகொண்டனா்.