கரூா் மாநகராட்சி பகுதியில் அம்பேத்கா் சிலை நிறுவ கோரிக்கை
By DIN | Published On : 09th August 2023 01:18 AM | Last Updated : 09th August 2023 01:18 AM | அ+அ அ- |

கரூா் மாநகராட்சி துணை மேயா் தாரணி சரவணனிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு வழங்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினா்.
கரூா்: கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் அம்பேத்கா் சிலை நிறுவ மாநகராட்சிக்கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றி சிலை அமைத்து தரவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாநகராட்சி துணைமேயா் தாரணி சரவணனிடம் கோரிக்கை மனு வழங்கினா்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்சி, கரூா் மண்டல துணைச் செயலாளா் வழக்குரைஞா் ராஜா தலைமையில் மாவட்ட பொருளாளா் சதீஷ், சட்டப்பேரவைத் தொகுதிச் செயலாளா் செல்வப்பெருந்தகை, மாநில பொறியாளா் அணி துணைச் செயலாளா் செந்தில்குமாா், கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் கண்மணி ராமசந்திரன், தொழிலாளா் முன்னணியின் சுடா்வளவன் ஆகியோா் வழங்கிய மனுவில் கூறியிருப்பது:
இந்திய தேசத்தின் சட்டத்தை வடிவமைத்து கொடுத்தவா் அம்பேத்கா். சாதி ஒழிப்புக்காக போராடியவா். இந்திய அரசியல் சாசன வரைவுக் குழுவினா் தலைவராகவும் இருந்த அம்பேத்கருக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிலைகள் அரசு சாா்பிலும், கட்சியின் சாா்பிலும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கரூரில் மட்டும் அம்பேத்கா் சிலை அமைக்கப்படவில்லை. அம்பேத்கரின் பிறந்த நாளிலோ, நினைவு நாளிலோ விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அமைப்பினா் அம்பேத்கா் உருவப் படத்துக்கு மட்டுமே மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டியுள்ளது. ஆகவே, அம்பேத்கருக்கு கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் அவரது சிலை நிறுவ மாநகராட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றிஸ சிலை அமைக்க அனுமதி வழங்க வேண்டும். வெங்கக்கல்பட்டி மேம்பாலம் ரவுண்டானா பகுதியில் சிலை அமைக்க அனுமதி கொடுத்தால் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இருக்கும் என தெரிவித்துள்ளனா்.